தற்கொலைத் தாக்குதலால் பேச்சுவார்த்தையை இரத்துச் செய்த அமெரிக்க அதிபர்

தற்கொலைப்படைத் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரத்துச் செய்தார்.

ட்ரம்ப் இன் தேர்தல் வாக்குறுதியில் ஆப்கானிஸ்தான் போரை முடிவிற்குக் கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். பொறுப்பேற்ற போது 8000 படையினர் எண்ணிக்கையே அங்கு மீண்டும் இருக்கும் வகையில் மீதமுள்ளோரை அமெரிக்காவிற்கே திரும்ப அழைக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

போர்க்களமாக 18 ஆண்டுகள் இருந்த ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். தலிபான் அமைப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களில் 5.400 படையினரை திரும்பப் பெற்றுக் கொள்ள அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல்லிற்கு பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பிற்கு ஆதரவும், புகலிடமும் அளிப்பதாக அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தலிபானுக்கு  எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றன.

தலிபான் கட்டுப்பாட்டில் இருந்த அரசிற்கு எதிராக  2001இல் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா படையெடுப்பு நடத்திய பின் சர்வதேச நாடுகளின் இராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 3,500 பேர் அங்கு இறந்துள்ளனர். அவர்களில் 2,300 பேர் அமெரிக்கர்கள்.

1996 தொடக்கம் 2001 வரை தலிபான் ஆட்சியில் மதச் சட்டங்கள் கடுமையாக அமுலானதுடன், பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்.

2019 பெப்ரவரியில் வெளியான ஐ.நா. தரவுகளின்படி 32,000 இற்கும் மேலான குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் பிரவுண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இதுவரை நடந்த சண்டைகளில் 58,000 ஆப்கான் காவல்படையினரும், 42,000 ஆயுதப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் தலைவர்களுக்கிடையில் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு அரசுகள் முனைப்புக் காட்டி வருகின்றன. அமெரிக்க அரசும் ஒருபுறம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக இரகசிய பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்களில் 11பேர் உடல்சிதறி கொல்லப்பட்டனர்.

இதன் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக நடத்தவிருந்த இரகசிய பேச்சுவார்த்தையை இரத்துச் செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் “அவர்கள் (தலிபான்கள்) முக்கியமான இந்த அமைதி பேச்சுவார்த்தை காலத்தில்கூட போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அர்த்தமுள்ள எந்த உடன்படிக்கைக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது புரிகின்றது.

எனவே சமாதான பேச்சுவார்த்தையை நான் உடனடியாக இரத்துச் செய்து விட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.