தமிழ் மக்கள் கூட்டணியில் இருந்து விலகவுள்ள எஸ்.சிறிதரன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் வன்னித் தொகுதிக்கு வன்னியை சேர்ந்தவர்களை நியமிக்காது, கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதிக்கு நியமித்துள்ளனர் இந்த நிலையை அடுத்து தான் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

இன்று(16) மாலை வவுனியாவில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினரின் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பலருடன் பேசியும் எவரும் கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்வரவில்லை. இருந்தும் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு சென்று நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்திருந்தேன்.

வவுனியா மாவட்டத்தில் சந்திரகுமார் கண்ணனை தெரிவு செய்து, எமது கூட்டமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு தகவல் அளித்தேன். அவரும் சிறந்த ஒரு தெரிவு எனக்கூறி அழைத்து வரும்படி கூறினார். இதனால் அவருக்கு தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பான உத்தரவாதத்தையும் நான் வழங்கியிருந்தேன்.

ஆனால் இன்று கொழும்பிலுள்ள ஒருவரை வன்னி தேர்தல் தொகுதிக்கு நியமித்துள்ளனர். இதனால் கண்ணனை நான் கைவிட்டதாக மற்றவர்கள் கூறும் அளவிற்கு உள்ளது. விக்னேஸ்வரனை நான் மதிக்கின்றேன். அவருடன் செயற்படும் சிலரின் செயலால் மத்திய குழு போலியாக உள்ளது போல் இருக்கின்றது.

இந்நிலையில் நான் தொடர்ந்தும் தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்க விரும்பவில்லை. இதன் காரணமாக வவுனியா மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்கின்றேன்.

எமது அரசியல் நிலைப்பாடுகள் ஒரே மாததிரியானவையாகவே காணப்படுகின்றன. அத்துடன்அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்களாகவே இருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்து தலைமையை எண்ணி நாம் செல்வது சாத்தியமில்லை. கிழக்கு மாகாணம் போல வன்னியிலும் ஒரு தலைமை உருவாகுமாக இருந்தால் அதில் இணைந்து பயணிப்பேன்.

விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்விற்கு 13 பேருந்துகளில் வன்னியிலிருந்து மக்களை அழைத்துச் சென்றிருந்தோம். நிகழ்வின் பின்னர் நடைபெற்ற விருந்துபசாரத்திலும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர எவரும் கலந்து கொள்ளவில்லை. விக்னேஸ்வரன் ஏனைய நான்கு மாவட்டங்கள் தொடர்பாக சிந்திப்பதற்கு தயாராக இல்லை.

வன்னியில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றக்கூடிய நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்த போதும், கொழும்பிலிருந்து வேட்பாளரை நியமித்தமையானது, தமிழ் மக்கள் கூட்டணி வன்னித் தேர்தல் தொகுதியில் ஒரு ஆசனத்தைக்கூட கைப்பற்ற முடியாத நிலைக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.