தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் மாமனிதர் சிவராமின் பங்கை விளக்குமாறு அவரின் பதினைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நெற் ஆசிரியர் ஜெயாவிடம் இலக்கு மின்னிதழ் வினவிய போது அவர் வழங்கிய
கருத்துக்களை இங்கு தருகிறோம்:

இலங்கை ஒற்றையாட்சி அரசு முழுத்தீவுக்குமான சோசலிச ஜனநாயகக் குடியரசு என்று தனக்குத் தானே மகுடமிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அது ஓர் ஆக்கிரமிப்பு அரசு.

இலங்கைத் தீவில் அரசியல் யாப்புரீதியான அரசுருவாக்கங்கள் மூன்று முறை (1947, 1972, 1978) நடைபெற்றுள்ளன. இந்த மூன்று தருணங்களிலும் தீவின் வடக்கு கிழக்கைப் பாரம்பரியத் தாயகமாகக் கொண்ட ஈழத்தமிழர்களின் மக்களாணை புறந்தள்ளப்பட்ட நிலையிலேயே அரச உருவாக்கம் நடந்தேறியிருக்கிறது. தமது கோரிக்கைகள் மறுக்கப்பட்டதால் குறித்த அரச உருவாக்கத்தைத் தமிழ் மக்கள் மூன்று சந்தர்ப்ங்களிலும் நிராகரித்துள்ளார்கள் என்பது கவனிக்கற்பாலது.

ஆனாலும், வலுவான ஆயுதப் போராட்டம் ஏற்படுத்திக்கொண்டிருந்த தாக்கத்தினால், தீர்வுத்திட்டம் என்ற போர்வையில் தொடர்ந்தும் அரசியலமைப்பு மாற்றங்களுக்கான நகல் வடிவுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவ்வாறான பொழுதுகளில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிச்சக்திகளின் உந்துதலுக்கோ அல்லது வேறு விடயங்களுக்கோ இலகுவில் அடிபணியா திருக்கவேண்டும். இதற்கு ஏதுவாகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசமாகத்  தமது நிலைப்பாட்டை ஒன்றிணைந்த ஒரு கூட்டமைப்புக்கூடாக முன்வைக்கும் வகையில் கட்டமைக்கப்படவேண்டும் என்ற கருத்து சிவராமிடம் இருந்தது.

அதேவேளை, ஈழத்தமிழர் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வை இலங்கைப் பாராளுமன்ற அரசியலுக்கூடாக ஒருபோதும் அடைய முடியாதென்பதிலும் அவர் தெளிவாக இருந்தார்.

மூத்த தலைமுறைத் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற அரசியல்வாதிகளில் ஒரு தரப்பினர் இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்டுவர முயற்சித்த எதுவித பலனுமற்ற அரசியல்யாப்புத் திருத்த நகல்களுக்கு ஆதரவளித்துவிடும் மனநிலையில் இருந்தார்கள்.

ஆனையிறவுப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பின்னர், அதாவது 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கருத்துரீதியான ஒரு முன்னெடுப்பை சிவராம் மேற்கொள்ள ஆரம்பித்தார். இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான முன்னோடி நகர்வாகியது.images 4 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

இலங்கையின் பாராளுமன்ற அரசியல் ஓட்டத்தில் கலந்துகொண்டு, அதேவேளை இலங்கை இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிவிட்டிருந்த முன்னாள் போராட்ட அமைப்புகளை மீண்டும் தமிழ்த்தேசிய அரசியல் ஓட்டத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை சிவராம் ஒரு புறம் ஆரம்பித்திருந்தார்.

மறுபுறத்தில் கூட்டணி அரசியல்வாதிகளிற் சிலருடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் அரங்கேறவிருந்த போலி நாடகங்களுக்குள் அதன் மூத்த அரசியல்வாதிகள் சிக்கிவிடாத ஒரு சூழலைத் தக்கவைப்பது அவரது முதலாம் கட்ட தந்திரோபாய நகர்வாக இருந்தது. குறித்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சிவராம் முன்வைத்த கருத்துநிலைக்கு ஒத்திசைவான நிலைப்பாட்டை எடுத்தது கண்டு அவர் நிறைவடைந்தார்.

எனினும், அடிப்படையில் கூட்டணியின் மூத்த அரசியல்வாதிகள் பலரில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

பின்னாளில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமைக்கப்பட்ட பின்னர், ஒரு சந்தர்ப்பத்தில் பின்வரும் கருத்தை எனக்கு வலியுறுத்தினார். “ஒருவேளை நான் இல்லாமற்போகும் நிலை வரலாம், அதனால் நான் உமக்கு மீண்டும் ஒன்றைச் சொல்லிவைக்கிறேன். செல்வம் அடைக்கலநாதனைக் கைவிட்டுவிடவேண்டாம். செல்வம் இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்காது. இதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம்.”

சிவராமின் மரணச் சடங்கின் போது மட்டக்களப்பில் செல்வம் அடைக்கலநாதனை முதன்முதலிற் சந்தித்தேன். அவரிடம் சிவராம் எனக்குச் சொல்லியிருந்ததைக் கூறி நினைவுகூர்ந்தேன். அவர் உணர்வுமேலீட்டால் நெகிழ்ந்துபோனார். 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கினால் எமது தொடர்பு விடுபட்டுப் போயிருந்தாலும், சிவராம் கூறிய அந்த வரிகள் இன்றும் எனக்குள் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன.DSCN0796 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

ஆனையிறவுத் தளம் மீதான தாக்குதலுக்குப் பின்னான காலப்பகுதியில் சிவராமுக்கும் எனக்குமிடையே நடந்த உரையாடல்களில் ஒரு குறிப்பிட்ட சிந்தனை மேலோங்கியிருந்தது.

ஒஸ்லோவின் ஏற்பாட்டில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோது அதில்; பங்குபற்றும் தரப்புகள் என்ற விடயத்தில் கையாளப்பட்ட அணுகுமுறைகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அந்தப் பேச்சுவார்த்தையின் போக்கில் பாலஸ்தீனர்களின் நிலை எவ்வாறு பலவீனமாக்கப்பட்டது என்பதையும் விளங்கிக்கொண்டே தமிழர் தரப்பு சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தையை அணுகவேண்டும் என்ற சிந்தனையே அது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஒரு தரப்பாகச் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா பொதுச்சபையில் ஏற்கனவே அந்த இயக்கம் பாலஸ்தீன மக்களின் ஏக சட்டபூர்வப் பிரதிநிதியாக (Sole Legitimate Representative)  அங்கீகரிக்கப்பட்டிருந்தமை வழிவகுத்திருந்தது.

இதற்கு ஒப்பான ஒரு நிலையை எமது விடயத்தில் எப்படித் தோற்றுவிக்கலாம் என்ற சிந்தனையின் போது, கூட்டமைப்பாக தமிழ் அரசியல்வாதிகள் இலங்கைப் பாராளுமன்றத்தில் இயங்கும் நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களே பேச்சுவார்த்தைக்கான ஜனநாயக ஆணையைத் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்வதன் மூலம் அதைச் சாதிக்கலாம் என்ற கருத்தை சிவராம் முன்வைத்தார்.

வன்னியில் இலங்கை இராணுவத்தின் ‘ஜயசிகுறுய்—வெற்றிநிச்சயம்’ நடவடிக்கை விடுதலைப் புலிகளால் தோற்கடிக்கப்பட்டதையும், ஆனையிறவுச் சமரின் வெற்றியையும் கண்டு வெகுண்டிருக்கும் சர்வதேச சக்திகள் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த பேச்சுவார்த்தையை ஒரு பொறியாகப் பயன்படுத்தும் சிக்கலையும் தமிழர் தரப்பு எதிர்கொள்ளவேண்டும்.

சிங்கள அரசியல்வாதிகள் சாமர்த்தியமாக நடந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதால் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தை ஒன்றில் தமிழர் தரப்பை மீண்டும் ஒற்றையாட்சிக்குப் பலியாக்குவதற்குக் கூட வெளிச்சக்திகள் முனையும் வாய்ப்பிருக்கிறது என்பது உணரப்பட்டது.

தமது புவிசார் அரசியற் தேவை கருதியே வெளிச்சக்திகள் இலங்கைத் தீவை அணுகும் என்பதால், பேச்சுவார்த்தையின் போக்கு, தமிழர்களுக்குப் பாதகமாக இரண்டு முனைகளில் வெளிப்படலாம் என்று கொழும்பு நிலைப்பாடுகளை நன்கறிந்த சிவராம் கருதினார்.

முதலாது, தமிழர் தரப்புப் பாராளுமன்றக் கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கான தரப்பாக விடுதலைப்புலிகளுடன் சமபந்தியில் இருத்த வெளிச்சக்திகள் முயற்சிக்கலாம். அதாவது, போர்நிறுத்தம் ஒன்றில் விடுதலைப் புலிகள் முக்கிய தரப்பாகினாலும், அதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய பேச்சுவார்த்தையில் புலிகளைத் தனித்தரப்பாக அன்றி பல தரப்புகளுள் ஒன்றாகக் கையாள வெளிச்சக்திகள் முனையலாம் என்பது.

கொழும்பும் தேவை, திருகோணமலையும் தேவை என்ற நிலைப்பாட்டிலேயே வெளிச்சக்திகளின் இலங்கைத்தீவு மீதான நாட்டம் இருந்துவருகிறது. ஆகவே, பேச்சுவார்த்தையில் உள்ளக முரண்பாடுகளை உருவாக்கித் தமிழர் தரப்பை ஒரு சிக்கலான நிலைக்குள் வைத்துக்கொண்டு, மறுபுறம் சிங்கள பௌத்த பேரினவாத இயக்கங்களுடனும் அதே வெளிச்சக்திகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கும்.unnamed தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

பேச்சுவார்த்தையின் போது கொழும்பு அரசின் இராணுவ பலத்தை மேலும் கெட்டியாக்க அதே சர்வதேச சக்திகள் எத்தனித்தால், ஈழப் போர் மூன்று ஏற்படுத்தியிருக்கின்ற தமிழர்களுக்குச் சாதகமான சூழல் பாதகமானதாக சமாதான முயற்சிகள் மூலம் மாற்றப்பட்டுவிடும்;ஆபத்தும் இருக்கிறது என்பதை இராணுவ ஆய்வாளர் என்ற வகையில் அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

ஆக, துணிவற்ற சில கூட்டணி அரசியல்வாதிகளை ஆற்றுப்படுத்துவது அல்லது வெளிச்சக்திகளின் நகர்வை முற்கூட்டியே சாமர்த்தியமாக எதிர்கொள்வது போன்ற தந்திரோபாயத் தேவைகளுக்காக மட்டுமல்ல, ஈழத் தமிழர் தேசக் கட்டலை வலுப்படுத்த வேண்டும் என்ற மூலோபாய நோக்கைக் கருத்தில் கொண்டே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான முன்னெடுப்பைச் சிவராம் மேற்கொண்டார்.

ஏற்கனவே, நீலன் திருச்செல்வம் போன்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஏற்படுத்தியிருந்த இலங்கையின் ஆளும் தரப்புகளுடன் ஒத்துப்போகும் அரசியலின் தாக்கத்திலிருந்து அதனை விடுவிப்பது என்பது சவாலாக இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஜோசப் பரராஜசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டோடு இயைந்து போகக் கூடிய தன்மைகளைக் கொண்டிருந்ததால் அவர் தலைமையிலான அணியை மட்டக்களப்பு அணி என்று வருணிக்கும் போக்கு இருந்தது. ஆனால், அவர் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கருத்துக்கு உடனடியாக உடன்படவில்லை.

பல்கலைக் கழக நிகழ்வொன்றுக்கு கிழக்குக்கு வந்திருந்த மாவை சேனாதிராஜாவுடனும் ஜோசப் பரராஜசிங்கத்துடனும் முதலில் சிவராம், சக ஊடகவியலாளர்கள் சிலருடன் தனது கருத்தை முன்வைத்தார். அவர்களுடனான சந்திப்பு எதுவிதமான பெறுபேறுகளையும் தரவில்லை என்று சிவராம் அப்போது சொன்னார்.

சரியான காலம் எனக்குத் தற்போது நினைவில் இல்லை. அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குட் சென்று மட்டு அரசியற் பொறுப்பாளர் திரு கரிகாலன் அவர்களுடன் இது குறித்து தனது கருத்துகளை முன்வைத்து, அவரை வன்னிக்கு இதுபற்றி அறிவிக்குமாறு சிவராம் கோரியிருந்தார்.

அதேவேளை செல்வம் அடைக்கலநாதனை அடிக்கடி சந்தித்துப் பேசிவந்த சிவராம் செல்வத்துடன் ஒரு முக்கியமான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார். அதாவது, கூட்டமைப்பு ஒன்றை அமைப்பதற்கு முன்னோடியாக, வடக்கிலும் கிழக்கிலும் ஒட்டுக் குழுக்களாக இயங்கும் முகாம்களை அவரது இயக்கம் மூடி விடவேண்டும் என்பதே அது. அந்த வாக்குறுதியோடு மீண்டும் கரிகாலன் அவர்களை சிவராம் தலைமையிலான ஓர் ஊடகவியலாளர் குழு கொக்கட்டிச்சோலையில் சந்திக்கிறது. இந்தத் தகவல்கள் வன்னிக்கு கரிகாலனூடாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக ரெலோவின் முகாம்கள் தமது ஒட்டுக்குழுச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க ஆரம்பிக்கின்றன. ஒரு சிலர் செல்வம் அவர்களின் கட்டளைக்கு அடிபணிய மறுத்து இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்து செயற்பட்டாலும், அவரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் அந்த நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகிக்கொள்கிறார்கள்.

karikalan 1 23485 200 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

இதைத் தொடர்ந்து செல்வம் அடைக்கலநாதன் கரிகாலனைச் சந்திக்க சிவராம் ஏற்பாடு செய்ததாகவும் எனக்கு ஒரு ஞாபகம். அடுத்தபடியாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் ரெலோவைப் போன்ற ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்கிறது. புளொட்டைப் பொறுத்தவரை ஒட்டுக்குழுச் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆற்றல் இல்லாத நிலையில் அதன் தலைமை இருந்தகாரணத்தினால், அது தவிர மற்றைய கட்சிகளை இணைக்கும் செயற்பாட்டில் சிவராம் தனது கவனத்தைச் செலுத்துகிறார்.

இறுதியாக அவர் தலைமையிலான ஊடகவியலாளர் குழு சந்தித்தது மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மறைவின் பின்னான அகில இலங்கைக் தமிழ்க் காங்கிரசை. அந்தக் கட்சியின் மூத்த அரசியல்வாதியாக அப்போதிருந்த அ. விநாயகமூர்த்தியை சிவராம் தலைமையிலான ஊடகவியலாளர்கள் குமார் பொன்னம்பலத்தின் வீட்டில் சந்தித்தபோது கூட்டமைப்பு அமைக்கும் முயற்சிக்கு அவர் உடனடியாக ஆதரவு நல்க முன்வரவில்லை. ஆயினும், சிவராம் மனம் தளர்ந்துவிடவில்லை. இழுபறி நிலை ஒக்ரோபர் 2001 வரை தொடர்ந்தது. குறிப்பாக சைக்கிள் சின்னத்தைக் கைவிட அந்தக் கட்சி தயாராக இருக்கவில்லை.

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமே நோர்வேயின் முன்னெடுப்புடனான பேச்சுவார்த்தை இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நவம்பர் 2001 இல் வெளியிட்ட போது, அதில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ்க் காங்கிரசும், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய நான்கும் இணைந்துகொண்டிருந்தன.  அத்தோடு சிவராமின் முன்னெடுப்பு கொள்கை ரீதியாக முற்றுக்கு வந்ததது.sambanthan ltte 07 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்திசைந்து செயற்படும் நிலை 2002 ஏப்ரல் மாதமளவில் உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் அப்போதைய தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் 2002 மே மாதம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும் என்று பகிரங்கமாகக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவித்தார்.

சிவசிதம்பரம் அவர்களின் மறைவைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் உருவாகியிருந்த இழுபறி நிலை குறித்து சிவராம் கவலை கொண்டிருந்தார். ஏற்பட்ட உள்முரண்பாடுகளின் விளைவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உரிமையை வீ. ஆனந்தசங்கரி தனக்கு மட்டுமுரியதாகக் கோரலானார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான தேர்தல் இலச்சினை தொடர்பான சிக்கல் தலைதூக்கியது.

அத்தருணத்திலேயே ஒரு பொது இலச்சினையின் தேவை கருதி, தந்தை செல்வாவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதிவு தூசி தட்டப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு ‘வீடு’ 2004 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் தன்னோடு உழைத்த அப்போதைய மட்டக்களப்பு தமிழ்நெற் செய்தியாளர் சே. ஜெயானந்தமூர்த்தியை கூட்டமைப்பின் சார்பில் 2004 தேர்தலில் பங்களிக்கச் செய்து வெற்றிபெறச் செய்தார் சிவராம்.

சிவராமைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசத்துக்கான ஓர் அரசியல் வெளி. இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் அதன் பிரதிநிதிகள் கட்டுப்படவேண்டியிருந்ததால் அது மட்டுப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் வெளியாக இருந்தாலும், சில சவால்களை முறியடிப்பதற்கும், அரசியல் ஒன்றிணைவை ஏற்படுத்துவதற்கும், தேசக்கட்டலுக்கும் பயன்படும் வெளியாக அதை மாற்றியிருந்தார்.

ஆறாம் சட்டத்திருத்ததுக்குள் உட்படும் ஒரு பிரதிநிதி தமிழ்நெற்றின் செய்தியாளராகத் தொடாந்தும் பணியாற்றமுடியாதென்ற வகையில் ஜெயானந்தமூர்த்தி தமிழ்நெற்றின் செய்தியாளராகத் தொடர்ந்து கடமையாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தானே முன்னின்று உருவாக்கியபோதும் கூட்டமைப்பை விமர்சனத்தோடு நோக்கும் விதத்தில் தமிழ்நெற் தனது சுயாதீனமான தளத்திலேயே தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்பதில் சிவராம் தெளிவாக இருந்தார்.

பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஒரு முக்கியஸ்தர் சொன்ன ஒரு விடயம் இங்கு நினைவுக்கு வருகிறது. “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, கூட்டமைப்பாகப் பேணுவதற்கு நாம் சாம, தான, தண்ட, பேதம் ஆகிய நான்கு வழிமுறைகளையும் கையாளவேண்டியிருந்தது”.

2009 இற்கு முன்னரே அந்த நிலை என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழருக்கான சர்வதேச நீதிக்காகவும் நிரந்தர அரசியற் தீர்வை நோக்கியும் நேர்மையாக இயங்க முடியாத நிலையில் 2009 இற்குப் பின்னர் மந்தமானதாக மட்டுமல்ல, குந்தகமான ஒரு தரப்பாகவும் செயற்பட்டுவருகிறது என்பது ஆச்சரியமானதொன்றல்ல.

அதேவேளை, தேர்தல் அரசியலுக்கு அப்பால் திறக்கப்படவேண்டிய ஈழத்தமிழர் தேசக் கட்டலுக்கான அரசியல் வெளிகள் பல இன்றும் வெறுமையாக இருக்கின்றன. அவைபற்றிய தேடலுக்கும் தொடரப்படவேண்டிய முனைப்புகளுக்கான படிப்பினைக்கும் மாமனிதர் சிவராம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பின்னணியை அறிந்துவைத்திருப்பது பயனுள்ள ஒரு பாடமாகும்.