தமிழ் ஊடகத்துறை கவனத்தில் கொள்ளுமா?

தமிழ் ஊடகத்துறை குறித்த பெருத்த கரிசனை நீண்டகாலமாக உண்டு. அது தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதாக இல்லை. பலவேளைகளில் அது தனது சமூக அக்கறையையே தொலைத்துவிடுவது விசனம் தருகிறது.

ஊடகம் எப்போதும் மக்களின் காவலனாக இருக்க வேண்டியது. அதுவும் வியாபாரமாகி மக்கள் நலனைக் குழிதோண்டிப் புதைத்துவிடக்கூடாது. அதேபோன்று ஊடகச் செய்திகளை அவ்வாறே பகிரும் மக்களும் அது சரிதானா? என்று ஒருமுறை பார்த்து பகிரும் கடமை இருக்கிறது.

விடயத்திற்கு வருகிறேன். க.பொ.த சாதாரண தரப்பரீட்சை அதாவது 10ஆம் தர முடிவுகள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. அதில் அம்பாள்குளம் கிளிநோச்சியில் அமைந்துள்ள விவேகானந்த வித்தியாலய மாணவி செல்வி சிவாபிரபு இசைப்பிரியா அதிவிசேட சித்தியினைப் (9A) பெற்றுச் சாதனை படைத்தார்.

வன்னி மண்ணில் இருந்தான அவருடைய இந்த சிறப்பு நிலை தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்ற விடயமானதால் அது பலதரப்பு செய்தியானதில் வியப்பில்லை. ஆனால் செய்திகளை முந்தி வெளியிடுகின்றோம் என்ற முனைப்பில் தரவுகளை பலமுறை உறுதிப்படுத்தாது வெளியிடப்படும் தவறான செய்திகள் எத்தகைய பாரதூரமான விளைவுகளைக் கொண்டவை எனபiதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

தாயாரை இழந்து முல்லைத்தீவில் பாதுகாவலருடன் வசிக்கிறார் எனத் தாயார் உள்ள ஒரு மாணவி குறித்து செய்தி வெளியிடுவதோ அல்லது 2009 இல் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுடன் இந்த மாணவியை மகளாக சித்தரிக்க முனைவதோ மிகவும் அபத்தமானவை.

ஒரு இனம் தொடர்ந்தும் பெரும் சவாலை எதிர்கொண்டு நிற்கும் இன்றைய நிலையில் தமிழ் ஊடகத்துறை அதீத கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதேவேளை மக்களுக்கும் இவ்விடயங்களில் ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு என்பதையும் இங்கு வலியுறுத்தியாக வேண்டும்.

இளைய சகோதரியே உன் சாதனையால் இனம் பெருமை கொள்கிறது. அதேவேளை தவறான செய்திகள் ஏற்ப்படுத்தியுள்ள வேதனைகளால் தலைகுனிந்து நிற்கின்றோம். நீ மேலும் ஓர்மம் கொண்டு சாதிக்க வேண்டும் சிறக்க வேண்டும் என இனமாக வாழ்த்துகிறோம்.

நன்றி: நேரு குணரட்னம்