தமிழ் இனப்படுகொலையை உலகநாடுகள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன – சபா குகதாஸ்

ஈழத் தமிழர்களுக்கு 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இலங்கை அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்ட அதியுச்ச படுகொலைகளை தமிழ் இனப்படுகொலை என உலக நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளின் மன்றங்கள் ஏற்றுக் கொள்ளவும், தீர்மானங்களாக நிறைவேற்றவும், சட்டமூலங்களாகவும் நிறைவேற்றவும் ஆரம்பித்துவிட்டன இது நீதி வேண்டிப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த முதற் கட்ட வெற்றியாகும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவது தமிழ் இனப்படுகொலைத் தீர்மானம் வடக்குமாகாண சபையில் 10/02/2015 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த கட்டமாக ஈழத் தமிழர்களின் தொப்புக் கொடி உறவான தமிழகத்தில் 2015/09/16 தமிழக சட்டசபையில் அன்றைய முதலமைச்சர் ஐெயலலிதா அம்மையாரால் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது, “தமிழ் இனப்படுகொலை தான்” என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன் 2014/05/25 தமிழக முதல்வர் ஐெயலலிதா அவர்களினால் சட்டசபையில் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாக ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் உடைய நாடான பிரான்சில் 08/04/201 இவ்றி_சூர்_சென் (ivry-sur-seine) நகரசபையிலும், 13/02/2021 பாரிஸ் பொபினி நகரசபையிலும், 11/02/2021 திரான்சி(Drancy) நகரசபையிலும் தொடர்ச்சியாக தமிழ் இனப்படுகொலைத் தீர்மானங்கள் மூன்று சபைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் சுயநிர்ணய உரிமைக்கான பொதுவாக்கெடுப்பும் நடாத்த வேண்டும் என்ற தீர்மானங்களும் பிரான்ஸ் நகரசபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனடாவில் ஒன்ராறியோ மாநில சட்டசபையில் தமிழ் சட்டமன்ற உறுப்பினர் விஐய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட தமிழ் இனப்படுகொலை வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும் முகமாக மே மாதத்தில் இனப்படுகொலை வாரம் என்ற 104 இலக்க சட்டமூலம் 06/05/2021 ஒன்ராறியோ சட்டசபையில் ஏகமனதாக மூன்றாம் வாசிப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒன்ராறியோவில் வாழும் 350,000 தமிழர்களுக்கும் ,ஈழத் தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஆகவே ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதை உலக நாடுகள்  இனி வரும் நாட்களில் ஏற்றுக் கொள்ளுவதற்கான நல்ல சகுணம் உருவாகியுள்ளது. அத்துடன் இனப்படுகொலை நடந்தமைக்கான போதிய ஆதாரங்கள் ,சாட்சியங்கள் இருக்கின்றபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என்றும் இனப்படுகொலை நடந்த 12 ஆண்டில் கொல்லப்படட அனைத்து உறவுகள் மீதும் சபதம் செய்வோம்”என்றார்.