தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவு

சிறிலங்காவில் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம்(10) மூன்றாவது தடவையாக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது 6 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது.

இதற்கமைய ஒக்டோபர் 13ஆம் திகதி  ஞாயிற்றுக் கிழமை பொது இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தில் இந்த கட்சிகள் கைச்சாத்திட உள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான  பேட்பாளர்களிடமும், வெளிநாட்டுத் தூதரகங்களிடமும் தமிழர் தரப்பின் கோர்க்கைகளை கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி சிறிலங்காவில் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுவான நிலைப்பாடொன்றிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், அதற்காக ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல்களின் 3ஆவது சந்திப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் நேற்று(11)  மாலை இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் வலி.வடக்கு பிரதேச சபையின் தலைவர் சோ.சுகிர்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன், புளொட் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் அதன் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எஸ்.சிறீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சந்திப்பை முடித்து வெளியேறிய தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட ஆறு கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றிற்கு வரும் ஏது நிலைகள் தோன்றியிருப்பதாகத் தெரிவித்தனர்.

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அமைய தமிழர் தரப்பின் பொதுவான கோரிக்கைகளை உள்ளடக்கிய இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதி கட்சித் தலைவர்கள் குறித்த ஆவணத்தில் கையொப்பம் இடுவார்கள் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.