தமிழ் அகதி குடும்பம் தடுப்பு முகாமிலிருந்து விடுதலை

தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி குடும்பமான பிரியா-நடேஸ் குடும்பத்தினர் கூடிய விரைவில் விடுதலைச் செய்யப்பட இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்த குடும்பத்தினர் ஒன்றாக தங்க அனுமதிக்கப்படுவார்கள். அங்கிருந்தவாறு தங்களுக்கு முறையான குடியுரிமை வழங்கக் கோரி அவர்கள் நீதிமன்றத்திலும் வழக்காட முடியும்.

பில்லோவீலா குடும்பம் என்று அழைக்கப்படும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 வயது தாருணிகா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பெர்த் நகருக்குக் கொண்டுவரப்பட்டார். அவருடன் தாய் பிரியாவும் வர அனுமதிக்கப்பட்டிருந்தது.

தாருணிகாவின் உடல்நிலை பாதிப்படைந்ததால், பில்லோவீலா குடும்பத்தினரைப் பற்றிய கவலை பொதுவெளியில் மீண்டும் அதிகரித்தது.

தாருணிகாவின் தந்தை நடேஸ், மூத்த மகள் கோபிகா ஆகியோரும் பெர்த் நகருக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்துள்ளார்.

இனி அவர்கள் பெர்த்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான “சமூக தடுப்பு முகாமில்” தங்க வைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் கண்காணிக்கப்பட்டாலும் சுதந்திரமாக நடமாட அனுமதி உண்டு.