தமிழை இரண்டாம் நிலைக்கு தள்ளிய அமைச்சர்! வடக்கிலிருந்து வெளியான எதிர்ப்பு

விமல் வீரவன்ச அரசியலமைப்பை மீறியுள்ளதுடன் அமைச்சராக பதவியேற்கும் போது முன்னெடுத்த சத்தியப்பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவாஞானம் சாடியுள்ளார்.

மன்னாரில் கைத்தொழில் பேட்டையின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்த போது, பிரதான மொழியாக தமிழ் மொழியும், இரண்டாம் மொழியாக சிங்கள மொழியும் அந்தப் பெயர்ப் பலகையில் பொறிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அமைச்சர் விமல் வீரவன்ச தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அப்படத்திற்கு கீழ் பலர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இதன் பின்னர், அந்தப் பெயர்ப் பலகையில் பிரதான மொழியாக சிங்களத்தையும், இரண்டாம் மொழியாக தமிழையும் மாற்றுமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து உடனடியாக சிங்களம் முதலிடத்திற்கும் தமிழ் மொழி இரண்டாம் இடத்திற்கும் மாற்றப்பட்டதோடு அதனை தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொண்டார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்,

“16ஆவது திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி அரச கரும மொழியாக இருக்கின்ற போது, அதை அமைச்சர் மீறியிருக்கின்றார்.

அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்யும் போது, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் நடந்துகொள்வேன் என சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், அமைச்சர் அரசியலமைப்பை மீற முடியுமென்றால், சாதாரண மக்கள் மீறலாம் தானே.

சாதாரண மக்கள் மீறினால் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அமைச்சருக்கு அரசியலமைப்பில் உள்ள விடயங்கள் தெரிய வேண்டும். அதைத்தான் மீறுகின்றார் என்பதும் தெரிய வேண்டும்” என்றார்.