தமிழர் பிரச்சினையை ‘மீண்டும்’ கைகளில் எடுக்கிறது இந்தியா – அகிலன்

கிழக்கு முனைய விவகாரத்தையடுத்து, இரு தரப்பு உறவுகளில் புதிய நெருக்கடி

“இந்தியாவுடனான பிரச்சினையை பரஸ்பர பேச்சுவார்ததைகள் மூலமாகத் தீர்த்துக்கொள்ள முடியும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்திருப்பது, இரு தரப்புக்கும் இடையில் நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.  அதேவேளையில், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால், நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் ராஜபக்‌சக்களின் அரசு இருப்பதையும் புலப்படுத்தியிருக்கின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதில்லை என்ற முடிவை கடந்த திங்கட்கிழமை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து, இலங்கை மீது அதிகளவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் இந்தியாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்திய நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை எதிரொலித்திருக்கின்றது.

“ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவத்துக்கும் நீதிக்கும் சமாதானத்துக்குமான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை கௌரவமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே, இலங்கையின் சொந்த நலனுக்கு உகந்தது” என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் மேல் சபையான ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை தொடர்பாக ஜெய்சங்கர் இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது தடவையாக அந்தநாட்டு நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டதன் பின்னணியில் முக்கியமான இராஜதந்திர நகர்வுகள் இருக்கின்றன. இலங்கைத் தமிழர்கள் குறித்தும், தமிழக மீனவர்கள் குறித்தும், ஈழத் தமிழர்கள் குறித்தும் இந்தியப் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கொடுத்த பதிலுக்கும் பின்னணியில் இருப்பது கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியா எமாற்றப்பட்டமைதான் என்பதில் சந்தேகம் இல்லை.

கிழக்கு முனையம் பொருளாதார ரீதியாவும், கேந்திர அடிப்படையிலும் இந்தியாவுக்கு முக்கியமானது. அதிலும் குறிப்பாக அம்பாந்தோட்டை முறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்பன சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், கிழக்கு முனையத்தின் 49 வீதமான பங்கையாவது ஜப்பானுடன் இணைந்து பெற்றுக்கொண்டுவிட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையக இருந்தது. அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும் கிழக்கு முனையம் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதிலேயே தீவிரமாக இருந்தன. அமெரிக்கா கடந்த வாரத்தில் இதனைப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தது.

இந்தியாவினதும், மேற்கு நாடுகளினதும் எதிர்பார்ப்புக்கு முரணாக – இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவு இந்தியாவுக்கும், அதன் நேச நாடுகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில்தான் அவசரம் அவசரமாக இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையிலான புதிய நகர்வுகளை இந்தியா மேற்கொண்டிருக்கின்றது.

கிழக்கு முனையத்தை யாருக்கும் விற்கப்போவதில்லை எனவும், அதன் பங்குகள் முழுமையாக துறைமுக அதிகார சபையிடமே இருக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடந்த திங்கட்கிழமை அறிவித்தார். அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்து. கிழக்கு முனையத்தை யாருக்கும் வழங்குவதில்லை எனவும் அதற்குப் பதிலாக மேற்கு முனையத்தை வழங்கலாம் எனவும் அமைச்சரவை தீர்மானித்தது. அமைச்சரவையின் இந்தத் தீர்மானம் துறைமுகத் தொழிற்ச்க்கள் தடை உத்தரவையும் மீறி தொடர்ந்துவந்த போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.

2019 ஆம் ஆண்டில் இந்தியா, யப்பான், இலங்கை ஆகிய முத்தரப்பினரால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை இது மீறுவதாக அமைந்திருப்பதாக இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் உடனடியாகவே அமைச்சரவையின் முடிவுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். மறுநாள் கொழம்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். குறிப்பாக, முத்தரப்பு உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக மீறிச் செயற்பட முடியாது என்பதை அவர் தெரிவித்தார்.

இவ்வாறு செவ்வாய்கிழமை எதிர்ப்பைத் தெரியப்படுத்திய அதேவேளையில், அரசியல் ரீதியாகவும் சில நகர்வுகளை இந்தியா முன்னெடுத்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் சிறுபான்மையினக் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். குறிப்பாக விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா), சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ரவூப் ஹக்கீம் போன்றவர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின் போது மாகாண சபைகள், 13 ஆவது திருத்தம் போன்ற விடயங்களே முக்கியமாக ஆராயப்பட்டன. 13 ஆவது திருத்தத்தைப் பலப்படுத்துவது உட்பட பல விடயங்களில் இந்தியா கொண்டுள்ள அக்கறை இதன் போது வெளிப்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது.

தில்லியிலும் இந்தப் பிரச்சினை கடந்த சில நாட்களாக எதிரொலித்தது. இந்தியப் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் கலமாக இது இருப்பதால், இந்தியத் தரப்பு அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிகின்றது. தமிழக மீனவர்கள் நால்வர் இங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரம் கடந்த புதன்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தச் சம்பவத்தை வன்மையகக் கண்டிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதேபோல வியாழக்கிழமையும் இலங்கை விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்திய வெளிவிகார அமைச்சர், “ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவத்துக்கும், நீதிக்கும், சமாதானத்துக்குமான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை கௌரவமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே, இலங்கையின் சொந்த நலனுக்கு உகந்தது” எனக் கூறினார். இது ஒரு அறிவுரை போல இருந்தாலும், இதில் மறைமுகமான எச்சரிக்கை ஒன்றிருப்பதையும் அவதானிக்கலாம்.

 கடந்த மாதம் கொழும்பில் உயர் மட்ட தலைவர்களுடன் உரையாடியபோது நல்லிணக்க செயல்முறைக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதாக அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது மேலும் தெரிவித்தார். “ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகிய தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமானால், அது, 13ஆவது திருத்தம் உட்பட அர்த்தமுள்ள ஓர் அதிகார பரவலாக்கலுக்காக இலங்கை அரசு அளித்த உத்தரவாதத்தை செயல்படுத்துவதாக அமையும். 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்தி வருகிறது. எனது அண்மைய விஜயத்தின்போது (ஜனவரி 5 – 7) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, தினேஷ் குணவர்த்தன ஆகியோருடனான சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடினேன். இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு இந்தியாவின் ஆதரவு நீண்ட காலமாக உள்ளது என்பதை நான் மீண்டும் அவர்களிடம் வலியுறுத்தினேன். தமிழர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்ற அனைத்து மட்டங்களிலும் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

 கடந்த ஆட்சிக் காலத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து இந்தியா பெருமளவுக்கு மௌனமாகவே இருந்தது. ராஜபக்சக்களின் ஆட்சி மீண்டும் ஏற்பட்ட பின்னர்தான் இந்தப் பிரச்சினையை அதிகளவுக்கு அவர்கள் பேசத் தொடங்கியுள்ளார்கள். “அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு தீர்வு காணப்பட வேண்டும்” என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக அண்மைக்காலம் வரையில் இருந்திருக்கின்றது. ஆனால், இப்போது தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் குறித்து இந்தியா ‘மீண்டும்’ பேசத் தொட்கியிருக்கின்றது.

இது தமிழ் மக்கள் மீது ஏற்பட்ட திடீர்க் காதலாலோ அல்லது, ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதாலோ அல்ல. “இந்தியா எம்முடன் நிற்கின்றது” எனவோ, கொழும்பின் மீது அழுத்தம் கொடுக்கின்றது என்றோ இதனைப் பார்த்து தமிழ் மக்கள் புழகாங்கிதம் அடைந்துவிட முடியாது. 1980 களில் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கு தமிழர் பிரச்சினையை இந்தியா எப்படிப் பயன்படுத்தியதோ, அதேபோல, இப்போது சீனாவை எதிர்கொள்ள தமிழர் பிரச்சியை புதுதில்லி கைகளில் எடுக்கின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இடம்பெற்ற போது, அமைதியாக இருந்த இந்தியா, யாழ். பல்கலைக்கிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்ட போது அதற்கு எதிராக உடனடியாகவே களத்தில் இறங்கியது. இந்தியத் தூதுவர் பிரதமர் மஹிந்தவுக்கு கொடுத்த அழுத்தத்தையடுத்தே பிரச்சினையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது என்பது இரகசியமானதல்ல. கிழக்கு முனையத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களைக் கொடுக்க அதனை இந்தியா பயன்படுத்தியது. அதனைவிட, ஜெனீவாவும் இந்தியாவின் துருப்புச் சிட்டுக்களில் ஒன்று.

இந்தளவு துருப்புச் சீட்டுக்களைப் பயன்படுத்தியும், கிழக்கு முனையம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்திய நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான், இந்தியாவுடனான பிரச்சினைகளை பரஸ்பரம் பேச்சுக்களின் மூலமாகத் தீர்த்துவிட முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்திருக்கின்றார். பேசுவதன் மூலமாகத் தீர்கக்கூடிய பிரச்சினையாக இது இருக்குமா என்பது தெரியவில்லை. கிழக்கு முனையத்துக்குப் பதிலாக மேற்கு முனையத்தின் 85 வீதமான பங்கைத் தரத் தயார் என்பதுதான் கொழும்பு முன்வைத்துள்ள மாற்றுத் திட்டம். இதனை ஏற்கும் நிலையில் இந்தியா இல்லை. ஆக, இராஜதந்திர நெருக்கடி தொடரும் நிலைததான் காணப்படுகின்றது.