தமிழர்களை தொல்லைப்படுத்தும் தொல்லியல் திணைக்களம் – சிவசக்தி ஆனந்தன்

வவுனியா, ஓமந்தை மாளிகை கிராமத்தில் ஆலய காணியை துப்பரவு செய்யும்போது நிலத்துக்கு அடியில் உள்ள செங்கற்கள் மேலே வந்துள்ளதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலய நிர்வாகத்தினரை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று சந்தித்தார்.

தொல்லியல் திணைக்களத்தினால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் ஆலய நிர்வாகத்தினரை சந்தித்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

தேர்தல் காலத்திலும் கூட தொல்லியல் திணைக்களம் இந்த அப்பாவி கிராம மக்களை அதாவது இந்த ஆலயத்தை புனரமைக்க சென்ற மக்களை கைது செய்திருக்கின்றது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். இவர்கள் எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை. இந்த ஆலயம் தொல்லியல் திணைக்களத்திற்கு கீழ் இருக்கின்றது என்பதும் இவர்களுக்குத் தெரியாது.

அவ்விடத்தில் தொல்லியற் திணைக்களம் தனக்குரிய பெயர் பலகையை போடப்படவில்லை. அந்த வகையில் தமிழ் மக்களையும், இந்துக்களையும் தொடர்ச்சியாக இந்த தொல்லியல் திணைக்களம் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றது.

ஆகவே உடனடியாக ஜனாதிபதி இவற்றுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சு, திணைக்களங்கள் பிரதான ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினர் விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன் இவ்வாலயத்தை புனரமைப்பு செய்வதற்கு ஒரு விதமான இடையூறுகளையும் விளைவிக்கக் கூடாது என்பதுதான் கிராம மக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது. எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.