தமிழர்களுக்கு விடுதலை இல்லை, ஆனால் போர்க் குற்றவாளிகள் உயர் பதவிகளில் – மாவை சேனாதிராஜா

இலங்கையில் போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில்  இருக்கின்றார்கள். ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று (13.09) நடைபெற்றுள்ளது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்,

தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களின் உரிமைகளுக்காக போராடி வருகின்றார்கள். அந்தக் கொள்கையின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அதாவது மக்களின் சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். அந்த வகையில் மக்கள் தங்களுக்கான ஆதரவை வழங்கி வருகின்றார்கள். நாங்களும் எங்களுடைய கொள்கைக்காக குரல் கொடுத்து வருகின்றோம்.

எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளை செய்தவர்கள் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

ஆனால் நமது மக்களுக்கு அடிப்படை உரிமைகள்கூட இதுவரை வழங்கப்படவில்லை. அத்றகாக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் தேர்தலின் போதும் நாங்கள் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம்.

அதே நேரம் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், புநகரி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.