தமிழரசுக் கட்சியின் மட்டு – அம்பாறை சிறப்பு பொறுப்பு தலைவராக செல்வராசா நியமனம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சிறப்பு பொறுப்பு தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த துணைத்தலைவருமான பொன்.செல்வராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக இதுவரை பதவி வகித்து வந்த கி.துரைராசசிங்கம் இதுவரை கிழக்கு விவகாரங்களை கவனித்து வந்தார். அவர் மொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமது விருப்பத்துடன் பதவி விரகியதால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழரசுகட்சியின் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் படி தலைவர் மாவை சேனாதிராசாவால் பணிக்கப்பட்டு இந்த சிறப்பு பொறுப்பு தலைவர் பதவி பொ.செல்வராசாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராசா, பொ.செல்வராசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், “கட்சி யாப்பின் 13(அ)வின் படி எனக்களிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினடிப்படையில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்பு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கிறேன்.

அம்பாறை விடயங்களையும் உங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளும்படி பணித்துள்ளேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது விடயமாக பொ.செல்வராசாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, இதனை உறுதிப்படுத்தியதுடன் தாம் தமிழரசுகட்சியின் வளர்ச்சிக்காக தன்னால் இயன்ற கருமங்களை உத்வேகத்துடன் செய்யவுள்ளதாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கையினை ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.