தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கவலை – திருமலை நவம்

இலங்கை   தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும்  பனிப்போரும் பதவிப்போட்டிகளும்   ஏட்டிக்குப் போட்டியான நிலமைகளும்,  பொன் விழாக்காணவிருக்கும்  கட்சிக்கு சாவுமணி அடிக்கும் கெடுதியான  நிலமைகள் உருவாகி வருகிறது என்பது தெளிவாகவே தெரிகிறது  இந்த நிலமைகள் ஏற்படுவதற்கு  காரணம் என்ன ?  என்பதை   கண்டு கொள்ள முடியாமல் இருப்பதுதான் கவலை தருகிறவிடயம்.

பதவி மோகங்கள்  கட்சியின் பெறுமதியை புரிந்து கொள்ளாத மக்கள் , அர்ப்பணிப்பற்ற ஆதரவாளர்கள், ஆளுமையற்ற தலமைகள் ஒன்று சேர்ந்தே இன்று கட்சியை பரிநாசம்  ஆக்கம்  முற்படுகிறார்கள்.

17 அவது  மகாநாடு கடந்த 19 ஆம் திகதி (19.2.2024)நடைபெற இருந்த நிலையில் திருகோணமலை மாவட்ட நீதி மன்றிலும,; யாழ்ப்பாண நீதி மன்றிலும், மகாநாட்டுக்கு எதிராக தடை உத்தரவு பெறப்பட்டு மகாநாடு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட தடை உத்தரவுகள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து  பெறப்பட்டாலும் நோக்கம் ஒன்றாகவும்  பின்னணி ஒன்றாகவுமே இருக்கிறது என்பது வெளிப்படையாகவே  தெரிகிறது.

sri yoges தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கவலை - திருமலை நவம்17 ஆவது  மகாநாடு திருமலையில் நடைபெறப்போகிறது என்று அறிவித்தல் வெளியாகிய மறுகணமே  அதற்கெதிரான  முரண்பட்ட  விமர்சனங்களும், கண்டனங்களும்   கிளம்பியதற்கான ஆதாரங்கள் உண்டு. உதாரணமாக   திருகோணமலை மாவட்டத்தில் மாவட்ட தலைவர்  குகதாசன் தலைமையில் இடம் பெற்ற  வட்டாராத் தெரிவுகளில் குளறுபடிகளும் ஊழல்களும்  இடம் பெற்றிருக்கிறது.. மூத்த தலைவரான  இரா. சம்பந்தனின்; ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்கள். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உதசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று முறையிடப்பட்டிருந்தது.

பொதுச் செயலாளர் பதவிக்கு பலர் போட்டியிட விரும்பியபோதும் அதற்கு இடந்தராமல்   மத்திய குழுவில் இரண்டொருவர்  எடுத்த தீர்மானங்களை பொதுச்சபையில் பலாத்காரமாக திணிக்க முற்படுகிறார்கள்.

பொது செயலாளருக்கான தெரிவை     வாக் கெடுப்பு நடத்தப்படாமல்  யாப்புக்கு முரணாக நடத்தியிருக்கிறார்கள்.

பொதுச் செயலாளர் பதவியை இரு காலங்களாக பிரித்து இருவருக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டமை.

யாப்புக்கு முரணாக பொது சபைக்கு மேலதிக  உறுப்பினர்களை நியமித்து, தலைவர் தெரிவை நடத்தியமை

போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இக்குற்றச்சாட்டுக்களை  சீர் செய்யாமல்    மந்திரத்தால் மாங்காயை விழுத்துவதுபோல் மத்திய குழுவில் எடுத்த தீர்மானத்தை பொதுச்சபை ஏற்கவேண்டும் என்ற தோரணையில் நடந்து கொண்டது போன்ற சம்பவங்கள்  நிலமைகளை மோசமாக்கியிருந்தது.

sam suma 1 தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கவலை - திருமலை நவம்திருகோணமலை மாவட்டத்தில் தடை உத்தரவை பெற்ற நபர் கட்சியோடு  மிக நெருக்கம் கொண்டவர் அல்லர் என்றும்,   யாரோ ஒரு சிலரின் ஏவல் தன்மையால் இந்த கெடுதியை செய்ய முற்பட்டிருப்பது  கவலைக்குரிய விடயமாக பிரஸ்தாபிக்கப்படுகிறது.

தடை உத்தரவை பெற்றதன் பிரதான நோக்கம் புதிய தலைவர் ஸ்ரீதரனின் தலைமையில் கட்சி இயங்கக்கூடாது என்ற உள்நோக்கத்தின் அடிப்படையிலையே அந்த தடை உத்தரவு  பெறப்பட்டிருப்பதுடன்  முக்கிய பதவிகளில் தாம் விரும்பயவர்களை உறுதிப்படுத்தி அமர வைப்பதும், இன்னொரு நோக்கமாக இருக்கலாம். இதன் பின்னணியல் பல சூழ்சியாளர்கள்  செய்பட்டிருக்கிறார்கள் என்பது பொது அபிப்பிராயமாக காணப்படுகிறது.

தந்தை செல்வா  இலங்கை தமிழரசுக்கட்சியை ஸ்தாபித்தபோது  வட கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற தீர்க்க்துடன் கட்சியை ஆரம்பித்ததோடு அதில் இணைந்து கொண்டவர்கள் தந்தைவழி செயற்பட்ட  தலைசிறந்த ஆளுமைகளாகவும்,  அரசியல் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.  கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம், தளபதி அ.அமிர்தலிங்கம், திருகோணமலை  இராஜவரோதயம், இராமநாதன், விஜயநாதன்,   சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரை டாக்டர் நாகநாதன்  என்ற ஜாம்பவான்கள் கட்சியை ஆராதித்தார்கள். ஆனால் இன்று அந்த நிலை காணப்படவில்லை.

இலங்கை தமிழரசுக்கட்சியின் முதலாவது தேசிய மகநாட்டை தந்தையவர்கள் திருகோணமலையில் நடத்த தீர்மானித்தபோது   1951 ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் மிக முக்கிய ஆண்டாக அது பிரகடனப்படுத்தப்பட்டது.  இம்மகநாட்டில் தந்தை செல்வா தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.  திருகோணமலையை மகாநாடு நடத்துவதற்கு தான் தேர்ந் தெடுத்த காரணத்தை தந்தை  பகிரங்கமாக தெரிவித்தார்.

திருகோணமலை மக்கள் எமது முன்னோர்களின் மகிமையை காப்பாற்றுவதற்கு தகுதி உடையவர்கள் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். தமிழ் இனத்தை காப்பாற்றுவதற்கு  இங்கிருக்கும், ஆர்வத்தை நான் மெச்சுகிறேன் திருகோணமலை வாலிபர்களின் வீரத்துக்கும் தியாகத்துக்கும்  நான் தலைவணங்குகிறேன் என  பெருமைப்பட்ட ஊரில்தான் இன்று கட்சியை சிதைத்து சின்னா பின்னப்படுத்த தடை உத்தரவு பெறப்பட்டிருக்கிறது.

kalmunai sumanthiran தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கவலை - திருமலை நவம்யாழ்ப்பாணத்தில் பெறப்பட்ட தடையாணையில் மகாநாட்டுக்கு அறிவித்த கால அவகாசம் போது மானதல்ல  யாப்பின் பிரகாரம் 21 நாட்களுக்கு முன் பொதுச்சபை

உறுப்பினர்களுக்கு அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கவேண்டும் என மனுதாரார் கறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்றில் கோரப்பட்ட தடை  உத்தரவில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன் சிபார்சுக்கு அமைய பொதுச்சபைக்கு 6 உறுப்பினர்கள்  நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்  இது யாப்புக்கு முரணானது. இது தலைவர் தெரிவில் பாதக நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுச் செயலாளராக   தெரிவு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தை  சேர்ந்த சண்முகம் குகதாசனுக்குரிய   கடமைக்காலத்தை  ஒரு வருடமாக குறைத்து  மற்றொரு வருடத்தை மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு  வழங்கியிருப்பது தவறு  என மனுதாரரான பராராஜசிங்கம் சந்திரசேகரம் சுட்டிக்காட்டி இந்த தடையாணையை பெற்றிருக்கிறார்.

கட்சிக்கான   தலைவர் தெரிவு கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பின் மூலம்  சிவஞானம் ஸ்ரீதரன் தலைவராக  தெரிவு செய்யப்பட்டார். ஜனவரி 27 ஆம் திகதி பொதுச்செயலாளர் மற்றும் பதவிகளுக்கான தெரிவு இடம் பெறும் எனவும் 28 ஆம் திகதி 17 ஆவது மகாநாடு நடை பெறும் எனவும்  நகழ்ச்சி நிரல்  அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்பிரகாரம் பொதுச்செயலாளர் உட்பட்ட பதவிகளின் தெரிவுக்கு 27 ஆம் திகதி பொதுச்சபை உறுப்பினர்கள்  ஒன்று கூடியிருந்தார்கள்.

பொதுச்சபை கூடியபோது புதிய தலைவர் ஒரு பட்டியலை வாசித்துக்காட்டினார் பின்வருவோரை கீழ்க்குறிப்பிட்ட பதவிகளுக்கு  மத்திய குழுவின் சிபார்சுக்கு அமைய நியமிக்கவிரும்புகிறோம் இதை பொதுச்சபை அங்கீகரிககவேண்டும் என கோரினார்.

குறித்த பதவிகளுக்கு நியமிக்கும் அதிகாரம் பொதுச்சபைக்குரியதேதவிர மத்திய குழுவக்கு அல்ல.  பொதுச் செயலாளர் பதவி  மிக முக்கியம் கொண்ட பதவியாக இருப்பதால் மத்திய குழுவின் தீர்மானத்தை ஏற்க முடியாது  பதவியை அறிவித்து வாக் கெடுப்பு நடத்துங்கள்” என்று சபையில் பலர் வாதாடினார்கள்.

இக்குழப்பம் காரணமாக தலைவர் மாவை சேனாதிராஜா  பொதுச்செயலாளருக்கான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படுமென அவசரமாக  அறிவித்ததும், சபையிலிருந்தவர்கள் பலர் வெளியேறினார்கள்.

Sumanthiran Samanthan Mavai 0 தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கவலை - திருமலை நவம்மதிய இடைவேளைக்கு பிறகு தலைவர் மாவை  பொதுச் செயலாளருக்கான வாக் கெடுப்பு நடத்தப்படுமென அறிவித்தபோது திரு . சுமந்திரன்  குறுக்கிட்டு  தலைவரின் அறிவிப்புக்கு எதிராக மத்திய குழ எடுத்த திர்மானத்துக்கே இங்கு  வாக் கெடுப்பு நடதப்படுமென  அறிவித்தார்.

தீர்மானத்துக்கு அதரவானவர்கள் எதிரானவர்கள் கரங்களை உயாத்தும்படி சபையை கோரினார்.  வாக் கெடுப்பு நடத்தி  திரு. குகதாசன் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என முடிவை  அறிவித்தார்.

இது சபையில் மீண்டும் குழப்ப நிலையை உருவாக்கியது.

பலர் தமது  இருகரங்களை உயர்த்தி தமது அதரவை தெரிவித்த நிலையில் அது சுமந்திரனால்   எண்ணப்பட்டது.

பொதுச்சபையை சேராதவர்கள் சபைக்குள் அத்து மீறி நுழைந்திருந்தனர். அவர்களும் எண்ணிக்கைக்குள் சோக்கப்பட்டார்கள்.

இந்த குழப்பமான சம்பவங்கள்  அடிப்படையான பிரச்சனைகளை உருவாக்கிய நிலையில் தலைவர் தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கான  தெரிவுகள் குழப்பத்தில் முடிந்தது.

திரு . குகதாசன் தான்தான் உத்தியோக பூர்வ பொதுச் செயலாளர் என ஊடகங்களுக்கு போட்டி கொடுத்திருந்தார். ஆனால் அவரது நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் அவரை சபை ஏற்றுக் கொள்ளவில்லை கார சாரமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

சட்டத்தரணியான சுமந்திரன் யாப்பு விதிகளுக்கு அமைய வாக் கெடுப்பு நடத்தாமல் தனது நோக்கத்தை தவறான முறையில் நிறைவேற்றியிருக்கிறார். என, பரவலாக விமர்சிக்கப்பட்டது. கடுமையான குழப்ப நிலைகள் ஏற்பட்டது.

கட்சியின் மரபின்படி (யாப்பின்படி அல்ல) தலைவர் ஒருவர் வடக்கை சேர்ந்தவராக தெரிவு செய்யப்பட்டால் பொதுச்செயலாளர் கிழக்குக்கு வழங்கப்படவேண்டும் மறுபுறம் கிழக்கை சேர்ந்தவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டால் வடக்கை சேர்ந்தவர் செயலாளராக தெரிவு செய்யப்படவேண்டுமென்பது மரபு.

இந்த  மரபின் அடிப்படையில் திரு. ஸ்ரீநேசன் பொதுச் செயலாளராக  நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் அதை விரும்பாத சுமந்திரன்  தான் விரும்பிய ஒருவரை கொண்டுவர வேண்டும் என்பதற்காக . குகதாசன்  தெரிவில்  பல குளறுபடிகளை செய்துவிட்டார் என்பது உறுப்பினர்களின்  குற்றச்சாட்டு.

தனது நியமனத்தை பெரும்பாலனவர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்ட ககதாசன் ஒரு வாரம் கழித்து  தனது கைப்பட  பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக  கடிதமொன்றை  புதிய தலைவர் ஸ்ரீதரனிடம் கையளித்திருக்கிறார்.    குகதாசனின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டால் பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தவேண்டிவரும் இவ்வாறு நடத்தும் பட்சத்தில் திரு. சுமந்திரன் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டு விட்டால் தனது தலமைப்பதவிகு;கு ஆபத்து வந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்ரீதரன் காலங்கடத்தாமல் குகதாசன் மற்றும் ஸ்ரீநேசன் இருவரையும் சந்தித்து ஒரு சமாதான பேச்சுவார்ததை நடத்தியிருக்கிறார்.

முதல் ஒரு ஆண்டு குகதாசனை பதவி வகிக்கும்படியும் மறு ஆண்டு ஸ்ரீநேசனை பதவிவகிக்கும்படியும் பேச்சுவாhத்தை நடத்தி அவர்களை சம்மதிக்கவைத்து இருவரிடமும் உடன்பாட்டு கையெழுத்து பெற்றிருக்கிறார்.  இந்நிலையிலையே 19 ஆம் திகதி (19.2.2024) 17 ஆவது மகாநாட்டை திருகோணமலையில் நடத்துவதற்கு அறிவித்தல் விடுத்த நிலையிலையே  எதிராக தடை உத்தரவு பெறப்பட்டிருக்கிறது.

இலங்கை தமிழரசுக்கட்சி பாரம்பரிய முள்ள ஒரு கட்சி. இலங்கையிலுள்ள பழமையான கட்சிகளுக்கு நிகரான கட்சியாக செயற்பட்டு வருவதற்கு அப்பால் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை பெறுவதற்காக நீண்ட காலம் தேசியப் போரை நடத்திவரும் ஒரு கட்சி.    தந்தை செல்வநாயம் தளபதி அமர்தலிங்கம் இரா. சம்பந்தன் போன்ற தலைவர்கள் கட்சியை வழி நடத்திய விதம் சிங்கள ஏகாதிபதிதியத்துக்கு எதிராக மேற் கொண்ட போராட்டங்கள் எல்லமே இன்று அர்த்தமற்ற  புஸ்வாணமாக போய்விடுமோ என கட்சி ஆதரவாளர்கள் கவலைப்படுகிறார்கள். பவள விழா எடுக்கப்போகும் நேரத்தில் கட்சி பாழாகிவிடப்போகிறதா என பயங் கொள்கிறார்கள் மக்கள்.