தமிழக மீனவர்களின் அத்து மீறலால் இலங்கை மீனவர்கள் பாதிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர்  தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருவதோடு அவர்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதனால் அம் மீனவர்கள் உயிரிழப்புக்களையும் சந்திக்கின்றனர்.

மேலும் வாழ்வாதாரத்தையும் அவர்கள் இழக்கும் நிலை ஏற்படுகின்றது. இந்த சூழ் நிலையில், கைது செய்து தடுத்து வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கும்படி, இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி தமிழகத்தில் உள்ள மீனவர்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அதே நேரம் தமிழக மீனவர்களின் அத்து மீறல்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழர்தாயகப் பகுதியான முல்லைத்தீவில் உள்ள மீனவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக சமீபத்தில், இந்தியா – இலங்கை அதிகாரிகள், காணொலி வாயிலாக பேச்சு வார்த்தை நடத்தினர்.

இது குறித்து, இலங்கை மீன்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க எடுக்கப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களிடம் ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்குவித்து, மாற்று வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, இந்திய அதிகாரிகள் விவரித்தனர்.

கடல் எல்லை தாண்டுவதால் இரு தரப்பு மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, இந்தியா – இலங்கை கடலோர காவல் படையினர் இணைந்து, ரோந்துப் பணி மேற்கொள்ளலாம் என, இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சட்டம் – ஒழுங்கை பராமரிக்க, இரு நாடுகள் இடையே, உடனடி தொடர்புக்கு, ‘ஹாட்லைன்’ வசதியை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, இந்தியா வலியுறுத்தியது. அதை இலங்கை அரசு ஏற்றுள்ளது. உரிய சட்ட நடைமுறைகள் முடிந்தபின், மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என, இந்தியாவுக்கு உறுதி அளிக்கப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகள் சந்தித்து பேசவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.