தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மட்டு வைத்திய சாலைகள்!

சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பாலமுனை வைத்தியசாலையும் மருதமுனை வைத்தியசாலையும் தனிமைப்படுத்தல் வைத்தியசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 58பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறியுள்ளார்.

இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் சிவப்பு வலயங்களாக காத்தான்குடி, திருகோணமலை நகர், கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, அட்டாளைச் சேனை, உகன, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் இனங்காணப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் மூன்று பகுதிகள் தொடர்ச்சியாக தனிமைப் படுத்தப் பட்டு வருகின்றது. கல்முனை பிராந்தியத்தில் கல்முனை நகரில் சில கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளும் மட்டக்கள்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை பகுதியும் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகரில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்து வருகின்றது.

தனிமைப்படுத்தப் பட்ட பகுதியில் உள்ள மக்கள் எவ்வாறு எங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றார்கள் என்ற வகையிலும் வைரஸ் தொற்றானது எவ்வாறு பரவுகின்றது என்ற வகையிலும்  தனிமைப்படுத்தல் காலத்தை நீடிப்பது என்பது தங்கியுள்ளது.

மேலும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார்.இராணுவத்தினர்,பிரதேச செயலாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக  பிசிஆர் பரிசோதனைகளையும் முன்னெடுத்துவருகின்றோம். மக்கள் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் பட்சத்தில் எங்களால் அப்பகுதியில் தொற்றுக்களின் அளவு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்துதான் எதிர்வரும் காலங்களில் தனிமைப்படுத்தல் தொடர்பில் தீர்மானிக்கமுடியும்.

விசேடமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் சுகாதார துறையினருக்கும் கொரோனா தொடர்பாக செயற்படும் அனைத்து தரப்பினர்களுக்கும் ஒத்துழைப்பினை பூரணமாக வழங்கும்போதுதான் தனிமைப்படுத்தலை விரைவில்  நீக்கி,தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அந்த தொற்றினை கிழக்கில் இருந்து இல்லாமல்செய்யமுடியும்.

அதேவேளை கொழும் உட்பட புறநகர் பகுதிகளில் இருந்துவருகின்றவர்களையும் தாங்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 193நபர்கள் தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 332 நபர்கள் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளர். அம்பாறையில் 53நபர்களும் கல்முனை பிராந்தியத்தில் 915நபர்களும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் இனம் காணப்பட்ட கொரோனா தொற்றாளகளில் 1493நபர்களில் 595நபர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 915நபர்கள் குணமடைந்துள்ளனர்.