தண்டனைபெற்ற தமிழ் அகதிக்கு விசா வழங்கக்கோரினாரா? சர்ச்சையில் ஆஸ்திரேலிய மாநில எதிர்க்கட்சித்தலைவர்

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டில் தண்டனைபெற்ற தமிழ் அகதிக்கு bridging விசா வழங்குவது தொடர்பில் ‘ஆதரவுக் கடிதம்’ ஒன்றை வழங்கினார் என்ற சர்ச்சையில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் எதிர்க்கட்சித்தலைவர் Jodi McKay சிக்கியுள்ளார்.  ஆனால், அவர் மீது முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை Jodi McKay மறுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 2012 இல் படகுமூலம் வந்த 20 வயது தமிழ் அகதியொருவர், மேற்கு சிட்னியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஒருவருடன் நண்பராக அறிமுகமாகி பின்னர் சிறுமியின் வீட்டுக்குச்சென்று பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட நபருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனைக்காலம் முடிவடைந்து வெளியில் வந்த அவர் சிட்னி விலவூட் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் 2018 இல் விலவூட் முகாமிலிருந்து bridging விசாவில் தன்னை விடுதலைசெய்யுமாறு கோரி குறித்த நபர் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு Administrative Appeals Tribunal-இல் அதுகுறித்த மறுபரிசீலனை நடைபெற்றுவந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட நபரின் bridging விசா விண்ணப்பத்திற்கு ஆதரவாக Jodi McKay கடிதம் வழங்கியிருக்கிறார் என்பதுதான் தற்போது வெடித்திருக்கும் சர்ச்சை.

நன்றி SBS தமிழ்