டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து மீனவர்களிடையேயான மோதலுக்கே வழிவகுக்கும் – என்.ஜே. போஸ்

இலங்கையின் குறிப்பாக வடபகுதி கடற் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதும் அவர்களை சிறீலங்கா கடற்படையினர் தாக்குவதும், படுகொலை செய்வதுமான சம்பவங்கள் பல தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதல்களால் 500 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழக தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதி கூட இன்னும் கிட்டவில்லை. 

இந்த நிலையில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன் பிடிக்க அனுமதிப்பது என சிறீலங்கா அரசின் ஆதரவு அமைப்பான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் இலங்கை கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அண்மையில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் தமிழக கடரோ விசைப்படகு, மாநில மீனவர் நலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் என்.ஜே. போஸ் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய கருத்தை இங்கு தருகின்றோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்புடையதல்ல. தமிழர்களுக்கு தமிழர்கள் விட்டுக்கொடுத்து செல்லக்கூடிய நிலையில் நாம் இருக்கின்றோம். ஈழப்பிரச்சினையின் போது, அங்கிருந்து வெளியேறி தமிழகம் வந்த ஈழத் தமிழர்களுக்கு முதன்முதலில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அதன் பின்பே அரசிடம் அவர்களை ஒப்படைத்தோம். இது இவ்வாறிருக்க இது வரையில் இந்திய இலங்கை மீனவர்கள் நட்பு நாடு என்ற வகையில்  நல்ல நட்புடன் ( மாமா, மச்சான் என்று அழைத்து) தொழில் செய்துவந்தோம்.

ஆனால் இந்த உறவுகளை தற்பொழுது சில தீய சக்திகள் இந்திய மீனவர்கள், இலங்கை மீனவர்கள் என்று பிரித்திருக்கிறார்கள்.  அத்தோடு விடுதலைப்புலிகள் இலங்கையில் இல்லை என்ற நிலை உருவாகிய பின், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. அத்தோடு சிறைபிடிக்கப்பட்ட படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இது குறித்த தீர்வை இலங்கை கடறொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

சிறீலங்கா அரசும் இந்திய அரசும் மிகவும் நல்லுறவாக இருக்கின்றன. ஆனால் இருநாட்டு மீனவர்கள் மட்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து எந்தளவுக்கு சாத்தியம் என்பது சந்தேகமே.