ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் விடயம் பேசப்பட தளம் இல்லாமல் போய் விடுமா?

ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் விடயம் பேசப்பட தளம் இல்லாமல் போய் விடும் என்று கூறுவதில் உள்ள நியாயத்தை நான் தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றாலும் அதனை கவனிக்க வேண்டிய கரிசனையாக ஏற்றுக் கொள்ளலாம்.
எமது முடிவெடுக்கும் செயன்முறையில் இவ்விடயம் ஒற்றைக் காரணியாக தாக்கம் செலுத்தக் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடு.
அந்த அடிப்படையில் கருத்தாழமான விவாதத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பின்வரும் கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்:
——————
1. இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தரவுகளை சேகரிக்கும் செயற்பாடு (fact finding) முடிவடைந்ததன் பின்னரும் (2015 ஆம் ஆண்டு ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணை அறிக்கை), கலப்பு செயன்முறையை இலங்கை மறுத்த பின்னரும் (2015இல் ஏற்று 2016க்குப் பின்னர் மறுத்து), சர்வதேச குற்றவியல் செயன்முறையில் அதிகாரம் அற்ற ஜெனீவாவில் (ஐ. நா மனித உரிமை பேரவையில்) பொறுப்புக்கூறல் விடயம் தொடர்ந்திருப்பதற்கான நியாயம் என்ன?
——————
2. பொறுப்புக் கூறல் தொடர்பில் தீர்க்கமான நிலைப்பாடுகளை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்காமல், சான்றாதாரங்களை திரட்டுவோம் (evidence gathering) என்று சொல்வது எதிர்வரும் காலத்தில் அவ்வாறான செயன்முறைகளை எதிர்பார்த்து இன்று செய்யப்படும் நன் நோக்குடனான நகர்வா அல்லது ஜெனீவாவில் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடா?
——————
3. இலங்கையின் மீது அழுத்தம் பிரோயோகிக்க வேண்டும், அதற்கான தேவை தமக்குள்ளது, ஆனால் அதற்கு ஜெனீவா போதும் என்று தமது பூகோள அரசியல் நலன்கள் அடிப்படையில் மேற்குலகம் முடிவுகளை எடுக்கிறதா?
——————
4. அல்லது ஜெனீவாவில் தீர்மானங்களை மேற்குலகம் கொண்டு வருவது தமிழர்களுக்காகத் தான், அல்லது மனித உரிமைகளில் உள்ள அறம் சார்ந்த நம்பிக்கையில், அல்லது தாராளவாதத்தை ஊக்குவிக்கும் உலக ஒழுங்கை பலப்படுத்த தான் என நாம் நம்ப வேண்டுமா?
——————
5. மூன்றாம் கேள்விக்கு ஆம் எனவும் நான்காம் கேள்விக்கு இல்லை என்றும் பதில் அளித்தால் ஜெனீவா தளத்தை தக்க வைத்திருத்தல் யாருக்கு முக்கியம் – மேற்குலகத்திற்கா தமிழருக்கா?
——————
6. ஜெனீவாவை தாண்டி இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க விருப்பற்ற மேற்குலக நாடுகள் ஜெனீவா தளம் கை நழுவிப் போனால் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேறு மாற்று வழிகளை கையாள்வார்களா அல்லது இலங்கை விவகாரத்தை கைவிட்டு விடுவார்களா?
——————
7. இலங்கை மீதான அழுத்தத்தை பிரயோகிக்க ஜெனீவா தளம் இல்லாமல் போகும் போது, வேறு மாற்று உபாயங்களை கையாள மேற்குலகை நிர்ப்பந்திக்கும் வகையான நிலைப்பாடுகளை தமிழ்த் தரப்பு எடுப்பது ஆபத்தான அணுகுமுறையா?
——————
8. பொறுப்புக் கூறலை எவ்விதமான உண்மையான நகர்வும் எடுக்க முடியாத ஜெனீவாவில் இவ்விடயத்தை தேக்கி வைத்திருக்காமல், (யுத்தத்திற்குப் பின்னரும்) தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் பொறுப்பை மாத்திரம் ஜெனீவாவில் வைத்துக் கொண்டு பொறுப்புக் கூறல் விடயத்தை ஜெனீவாவில் இருந்து நீயு யோர்க்கிற்கு (ஐ நா பாதுகாப்பு சபை, ஐ. நா பொதுச் சபை) மாற்றுமாறு அழுத்தம் கொடுப்பது தான் தமிழர் தரப்பு செய்ய வேண்டியதா?
——————
9. மேலே எட்டில் சொல்லப்பட்டுள்ளதை செய்வதன் மூலம், பொறுப்புக் கூறல் மூலம் உண்மையான நகர்வை சாத்தியப்படுத்த முயற்சிப்பது, தொடர்ந்து ஜெனீவா தளத்தை தக்க வைப்பது என்ற இரட்டை குறிக்கோளை அடைந்து கொள்ள முடியுமா?

 

நன்றி: குருபரன் குமரவடிவேல்