ஜெனிவா குறித்த சம்பந்தனின் நிலைப்பாட்டை ஏற்பதற்கு ரெலோ மறுப்பு – செல்வம் அறிவிப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரதான நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 46/01 இலக்கப் பிரேணையை அதன் தற்போதைய நகல் வடிவத்தில் ஏற்று அங்கீகரிக்குமாறு அங்கத்துவ நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையுடன் தாங்கள் உடன்படவில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ தெரிவித்துள்ளது.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியும், அக்கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமியும் இந்தத்தகவலை தெரிவித்தனர். சம்பந்தனின் கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடாக நேற்று வெளியிடப்பட்டது. அது தொடர்பான அறிக்கையில் சம்பந்தன் ஒப்பமிட்டிருந்தார். இலங்கைத் தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும் அதில் ஒப்பமிட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 23, 24ஆம் திகதிகளில் ஜெனிவா அமர்வை ஒட்டி இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா ஆற்றிய உரைக்குப் பதிலளித்து வெளியிடப்படுவதாக இந்த அறிக்கை அமைந்தது. அதில் இப்போது ஜெனிவாவில் பிரேரிக்கப்பட்டுள்ள – இலங்கை தொடர்பான – பிரேரணையை ஆதரிக்குமாறு பேரவை அங்கத்துவ நாடுகளைக் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலைப்பாட்டையே ரெலோ தலைவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அந்த நிலைப்பாடு தங்களின் இசைவு அல்லது இணக்கத்துடன் வெளியிடப்பட்டதல்ல என்று செல்வமும் சுரேனும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியவை வருமாறு:

“ஜெனிவா அமர்வை ஒட்டி தமிழ்த் தேசியத் தரப்புகளில் மூன்று பிரதான கூட்டுக்களின் தலைவர்களும் (சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்) ஒப்பமிட்டு பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்குக்கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தனர். அதுவே தமிழர் தரப்பின் ஐக்கிய நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டது.

அதில் தமிழர் தரப்புகள் கோரியுள்ள முக்கிய விடயங்கள் ஏதும் இப்போது பிரேரிக்கப்பட்டுள்ள நகல் வரைவில் இல்லை. அப்படி இருக்கையில் அதனை நிறைவேற்றுமாறு அங்கத்துவ நாடுகளை நாம் எப்படிக் கோர முடியும்? அத்தகைய கோரிக்கையுடன் நாம் இணங்க மாட்டோம். சம்பந்தன் ஐயா ஓர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார். அதைப்பார்த்துக் கருத்துக் கூறுமாறு கேட்டார்.

ஆனால் அந்த அறிக்கை எனது பார்வைக்கு வர முன்னரே – நாம் பரிசீலித்துக்கருத்து கூற முன்பே – ஒட்டு மொத்தக் கூட்டமைப்பின் அறிக்கையாக அது வெளியிடப்பட்டு விட்டது. அதை நாம் ஏற்க முடியாது. இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றுக்கு பாரப்படுத்தக் கோருவது உட்பட நான்கு பிரதான கோரிக்கைகளை நாம் ஏற்கனவே ஒன்றுபட்ட வேண்டுகோளாக அங்கத்துவ நாடுகளிடம் வைத்துள்ளோம்.

அவற்றின் அடிப்படைகள் கூட இல்லாத ஒரு நகல் பிரேரணையை அங்கீகரிக்குமாறு அங்கத்துவ நாடுகளை நாம் கோருவது – அல்லது அத்தகைய கோரிக்கையுடன் நாம் உடன்பட்டுப் போவது – முறையான செயல் அல்ல. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் நடவடிக்கையாகவும் அது இருக்க மாட்டாது. எனவே சம்பந்தன் சார்பில் கூட்டமைப்பின் பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையுடன் நாம் உடன்படவில்லை என்பதை எமது மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் விவரமான அறிக்கை உடனடியாக வெளியாகும்” என்றார்.