பிரேரணை நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துங்கள் – கூட்டமைப்பு கோரிக்கை

இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் எந்த ஒரு விடயத்திலும் அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிப்பதாகவும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்த நிலையில், அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

“தற்போதைய நிலைமையில், எந்த ஒரு விடயத்திலும், அரசாங்கம் விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. புலிகளைக் குறிப்பிட்டு இலங்கை அரசாங்கம் பிரச்னையை தெளிவுபடுத்த முயற்சிக்கின்றது.

தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால், புலிகள் உருவாகியிருக்கமாட்டார்கள். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அதன் பின்னரே விடுதலை புலிகள் அமைப்பு உருவாகியது.

ஒருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அத்தீர்மானத்தில் இருந்து வெளியேற முடியாது. இலங்கையின் குறிப்பிட்ட முயற்சிகளின் தோல்விகளை சரியாக சுட்டிக்காட்டியுள்ள ஆணையாளரின் அறிக்கையை பலர் வரவேற்றுள்ளனர். உரிய நடைமுறைகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை விசாரிப்பது மனித உரிமைகள் பேரவையின் நியாயமான செயல்பாடாகும். இது நாட்டின் இறையாண்மை அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாக அமையாது.

30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமையே, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்படுத்த முயற்சித்தார். ஆனால், யுத்தத்தின்போது வலிந்து காணாமல்போன பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குறிப்பாக இறுதியில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்க அவர் முன்வரவில்லை. உண்மையை அறிந்து கொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் இலங்கை எந்தவிசாரணையும் நடத்தவில்லை.

நிறைவடைந்த விசாரணைகளின் அடிப்படையில் கூட நீதியை வழங்கஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய அரசமைப்பை இயற்றவும், அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் மற்றும் பிற விடயங்களில் முக்கியமான ஒருமித்த கருத்து எட்டப்பட இருந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் எதிராகச்செயற்பட்டது. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை, 46/1 ஐ நிறைவேற்றுவதை உறுதி செய்ய, உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றுள்ளது.