ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்? – அகிலன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது.

ஜெனிவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் இம்முறை ஏற்படுத்தியிருந்தமைக்கு பல காரணங்கள் இருந்தன. பொறுப்புக் கூறல் உள்ளிட்ட நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்கு தொடர்ச்சியாக சிறீலங்காவிற்கு வழங்கப்பட்டுவந்த கால அவகாசம் முடிவுக்கு வருகின்றது என்பது முதலாவது காரணம். கால அவகாசத்தைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட சிறீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறல் என்பன உட்பட்ட விடயங்களில் ஆக்கபூர்வமான எந்த ஒரு செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை என்பதை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மூன்று பிரதான தமிழ்க் கட்சிகள் இணைந்து தமது கோரிக்கைகளை எழுத்து மூலமாக மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தன. இணைத் தலைமை நாடுகள் தயாரிக்கும் பிரேரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இது அமையும் என்பது இரண்டாவது காரணம். மூன்று பிரதான தமிழ்க் கட்சிகளைவிட, வடக்கு கிழக்கில் தீவிரமாகச் செயற்பட்டுவரும் சிவில் சமூக அமைப்புக்களும் இந்தக் கோரிக்கை மனுவில் கைச்சாத்திட்டிருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. இம்முறை பிரேரணை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதற்கு இது இரண்டாவது காரணம்.

“பொ – பொ” பேரணி மூலமாக தமிழ் மக்கள் தமது கோரிக்கை என்ன என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தார்கள். மனித உரிமைகள் பேரவையில் மக்களின் இந்தக் கோரிக்கைகளும் செல்வாக்கைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனைவிட இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, இராணுவ மயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டங்கள், ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பனவும் சர்வதேச ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவே இருந்துள்ளன. இவை அனைத்தும் கடுமையான தீர்மானம் ஒன்றுக்கு பேரவையை நிர்ப்பந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
Capture 16 ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்? - அகிலன்

இதனைவிட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்  பச்சலெட் முன்வைத்த சிபார்சுகளில் குறைந்த பட்சமாவது இந்தப் பிரேரணையில் உள்வாங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர்கள் – நிபுணர்களைக் கொண்ட குழு போன்றன வெளியிட்ட அறிக்கைகளும் ஆணையாளர் பச்சலெட்டின் பரிந்துரைகளை அடியொற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழர் தரப்புக்கு இவை உற்சாகத்தைக் கொடுத்தன.

பொறுப்புக்கூறல் என்ற விடயம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து எடுக்கப்பட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது முக்கியமான விடயமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவதாக இலங்கை தொடர்பில் தொடர்ந்து நடக்கின்ற மனித உரிமைகளை அவதானிக்க மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும், மூன்றாவதாக நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை திரட்டுவது உள்ளிட்ட விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், தற்போது வெளியான வரைபை பார்க்கின்றபோது, இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் பலவீனமான வரைபாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை வெளியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், அவ்விடயம் பெரியளவில் குறிப்பிடப்படவில்லை. சர்வதேச குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை தவிர்க்கப்பட்டுள்ளமையானது தமிழர் தரப்புக்கு கடும் ஏமாற்றமாக உள்ளது.

ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த உலகளாவிய நீதிப்பொறிமுறையின் ஊடாக, இலங்கை விவகாரத்தை கையாளுவது, பொருளாதார மற்றும் பயணத் தடைகளை மேற்கொள்வதுபோன்ற எந்தவொரு விடயமும் உத்தேச அறிக்கையில் இல்லை. ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்திற்குள்ள கடப்பாடுகளை பிரேரணை மீளவும் வலியுறுத்துகின்றது. ஆணையாளரின் அறிக்கையுடன் ஒப்பிட்டால், உத்தேச அறிக்கை மிகவும் பலவீனமானதோர் அறிக்கை.

ஆனால் இதிலுள்ள விடயம் என்னவென்றால், இவ்வாறானதொரு மென்போக்குள்ள பிரேரணையைக்கூட, கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வழமைபோல் இதனையும் நிராகரிக்கப் போகின்றனர்.  அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்திருக்கின்றார். “சிறீலங்காவிற்கு எதிராக ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள பல பிரேரணைகள் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று எதிர்வரும் காலங்களில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணைகளை நிராகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இறுதியாக வெளிவந்திருந்த 30-1 பிரேரணையில் அரசியல் தீர்வு தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தின் மூலமாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருந்தது. 13 ஆவது திருத்தத்தை தமக்கான இறுதித் தீர்வாக தமிழ்த் தரப்பினர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும், தற்போதைய நிலையில் இருக்கக்கூடிய குறைந்தபட்சத் தீர்வாக அதுதான் உள்ளது. அதனைக்கூட இல்லொதொழிக்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ள நிலையில், புதிய உத்தேச பிரேரணை அது குறித்து கூட எதனையும் தெரிவிக்கவில்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்க் கட்சிகள் அமைப்புக்களிடம் கூட தெளிவான – உறுதியான நிலைப்பாடு ஒன்று இல்லாதிருப்பது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற கருத்து ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்று தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் இணைந்து அனுப்பிவைத்த யோசனையில் கூட அது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. முக்கியமான விவகாரங்களில் ஒருமித்த குரலில் பேசக்கூடிய நிலையில் தமிழர் தரப்பு இல்லை என்பது எமது பக்கத்திலுள்ள முக்கிய குறைபாடு. அவ்வாறான நிலையில், சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுப்பதும் சாத்தியமற்றதாகலாம்.

இப்போது வெளிவந்திருப்பது முதலாவது வரைபுதான். இதில் திருத்தங்களை முன்வைக்க முடியும். இதனை இன்னும் பலப்படுத்தவும் முடியும். பலவீனப்படுத்தவும் முடியும். கடந்த வருடங்களில் வெளிவந்த தீர்மானங்களைப் பொறுத்தவரையில் முதல் வரைபைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றிருந்தது. பிரேரணைக்கு இணை அனுசரணையை வழங்குவதாகக்கூடியே அதனை அவர்களால் செய்ய முடிந்தது. தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணைக்கு முன்வரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. அதனால், தற்போதைய வரைவு இறுதியாக்கப்படுவதற்கு முன்னர் அதில் மாற்றங்களைச் செய்வதற்கான முயற்சிகளை தமிழர் தரப்பு முன்னெடுக்க முடியும்.

ஆனால், ஜெனீவாவுக்குள் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலாளர் நாயகமும், இலங்கை குறித்து ஆராய்வதற்காக ஐ.நா. பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகச் செயற்பட்டவருமான சாள்ஸ் பீட்றி தெரிவித்திருக்கும் கருத்து ஒன்றும் முக்கியமானது. “இலங்கையில் யுத்தத்தின் போது மோசமாகப் பாதிக்கப்பட்ட – வேண்டுமென்றே அநீதி இழைக்கப்பட்ட – மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஐ.நாவில் தங்கியிருப்பதில் பயனில்லை” என்று அவர் கூறியிருந்தார். ஐ.நா.வுடன் பல வருட அனுபவத்தைக் கொண்ட அவர், அதன் அடிப்படையில்தான் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார்.

“தங்கியிருப்பதில் அர்த்தமோ, பயனோ ஏதுமில்லை. இலங்கை மக்கள் ஐ.நாவை நம்பி அதில் தங்கியிருந்தால் ஏமாற்றமே அடைவார்கள். இத்தகைய விடயங்களில் உண்மையைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஒழுங்கு முறைகள், ஏற்பாடுகள், விதிகள் ஐ.நாவிடம் உள்ளன. ஆனால், அதற்கான கட்டமைப்புத் திடசங்கற்பம் ஐ.நாவிடம் இல்லை. ஆகவே அதை – ஐ.நாவை – நம்பியிராமல், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைத் தேடும் முயற்சியை சம்பந்தப்பட்டோர் தம்பாட்டில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வேறுவழியின்றி அதற்குப் பின்னால் ஐ.நா. வரும். அப்படி நிகழ்ந்தால் எதிர்பாராத வெற்றியாக அது அமையும்” என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், இறுதி வேளையில்தான் அவர்கள் செயற்படத் தொடங்கியிருந்தார்கள். திட்டமிட்ட முறையில் கடந்த வருடத்திலிருந்தே இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டிருநந்தால் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க முடியும். சர்வதேச நாடுகள் தமது நலன்களை இலக்காக வைத்துத்தான் செயற்படுவார்கள். தமிழ்த் தலைமைகள் இந்த 12 வருடகால அனுபவத்தில் எவ்வாறு சர்வதேச சமூகத்தை அணுக வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவில்லை. அதனால், போர் முடிவுக்கு வந்து 12 வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. மீண்டும் ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. இந்த நிலையிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு என்ன செய்ய முடியும்?