ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகினார்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே (வயது 65) ஜப்பா் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக பதவி வகித்ததுடன் அதிக காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார். அத்துடன் ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய உதவிய தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

அவர் குடல் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அபே காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த அவர், எனது உடல்நலம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டை வழிநடத்துவதில் சிக்கல் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பின்படி செயற்பட முடியாதுள்ளது. எனவே எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே உடல்நலக் குறைவு காரணமாக 2007ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகியிருந்தார். மீண்டும் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்துவதாகக் கூறி 2012இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.