இராணுவத்திற்குக் காணிகளை அபகரிக்கும் கொள்கையை அரசு கைவிடவேண்டும் – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

பொதுமக்களின் நிலங்களை இராணுவத்தேவைகளுக்கு அபகரிப்பதை அரசாங்கம் கொள்கையாகக் கொண்டுள்ளது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றம்சாட்டினார்.

இன்று மண்டைதீவில் இடம்பெற்ற நில அபகரிப்பு முயற்சி பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தடுத்து நிறுத்தப்பட்டது. அப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதன் திட்டங்கள் மக்களை வந்தடைய முன்னர் இராணுவத்திற்காக பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

கடந்தவாரம் மாதகல் பகுதியில் கடற்படைக்குக் காணி சுவிகரிக்க முயற்சிக்கப்பட்டது. அது பொது மக்களினாலும் அரசியல் பிரதிநிதிகளினாலும் தடுக்கப்பட்டது. இன்றைய தினம் (28) மண்டைதீவு மக்களின் நிலங்கள் சுவிகரிக்கப்படுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் இவ்வாறான நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொது மக்கள் தமக்கான சொத்துரிமையினை கொண்டிருப்பதற்கான உரிமையினைக் கொண்டுள்ளனர் என்பதை அரசாங்கம் கேள்விக்குட்படுத்தக்கூடாது. பாதிக்கப்பட்ட எமது மக்கள் விடயத்தில் மக்களை உரியவாறு அவர்களது நிலங்களில் குடியேற்றி அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தினை மேம் படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து வளமான நிலங்களை இராணுவ மயப்படுத்துவது ஏற்புடையதல்ல.

இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைப்புச் செய்யவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குள்ள இடத்தில் பொதுமக்களின் வளமான நிலங்களை இராணுவத்திற்கு அபகரிக்க முயற்சிப்பது பாரதூரமானது.

தமிழ் மக்கள் அவர்களது நிலங்களில் உரிமையுடன் வாழ தீர்வுகளை எதிர்பார்க்கும் நிலையில் அரசாங்கத்தின் இவ்வாறான முயற்சிகள் கண்டனத்திற்குரியவை. சிவில் சமூக ரீதியில் முற்போக்கு சக்திகள் சகலதும் இணைந்து அரசாங்கத்தின் இராணுவ மயமாக்க சிந்தனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க தகல தளங்களிலும் தயாராகவேண்டிய தேவையுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.