ஜனாதிபதி வேட்பாளர்கள் பற்றி இந்திய றோ ஆராய்கின்றது

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களை இந்திய உளவு அமைப்பான றோ கண்காணிப்பதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபயா ராஜபக்ஸவையும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவையுமே இந்திய றோ அமைப்பு கண்காணிப்பதாக இந்த நாளிதள் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்தியத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் றோ அமைப்பிற்கு தமது விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான மேற்குறிப்பிட்ட இருவரினதும் பிரசாரக் கூட்டங்களிற்கு நேரடியாக விஜயம் செய்த றோ குழுவினர்,  அவர்களின் உரைகளை வீடியோ பதிவு மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக இந்திய றோ அமைப்பு பெரிதும் பாடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணித்து வரும் இந்திய உளவு அமைப்பான றோ, முக்கியமாக குறித்த இரண்டு வேட்பாளர்களையும் குறிவைத்துள்ளதாகவும் குறித்த சிங்கள நாளிதள் செய்தி வெளியிட்டுள்ளது.