ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன் கோட்டா இதற்கு பதில் சொல்ல வேண்டும் – சிவமோகன்

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோத்தாபய தேர்தலில் போட்டியிடட்டும் என வன்னி எம்.பி. சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில்நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு கட்சியினர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளனர்.

அங்கு வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பாலகுமாரன், யோகி மற்றும் கவிஞர் ஒருவரும் சரணடைந்திருக்கின்றார்கள். வெளிப்படையாக அவர்களின் குடும்பங்கள் முன்னிலையிலேயே அவர்கள் சரணடைந்துள்ளார்கள்.

நூற்றுக்கணக்கானோர் ஒரு கிறிஸ்தவ மதகுருவுடன் சேர்ந்து சரணடைந்தார்கள். எனவே அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டு கோத்தாபய வாக்குக் கேட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என்றார்.