செல்பேசி திரைகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் வாழும் கொரோனா வைரஸ்!

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வு ஒன்றில், கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் போன்றவற்றில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புள்ளது என  தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த ஆய்வு இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புறஊதா கதிர்களை கொண்டு இந்த வைரஸை அழிக்க முடியுமென ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

சில வல்லுநர்கள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற மேற்பரப்புகளில் காணப்படும் வைரஸ், பரவுவதால் ஏற்படும் உண்மையான அச்சுறுத்தல் குறித்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் அல்லது பேசும்போதே பரவுகிறது. ஆனால், காற்றில் மிதக்கும் துகள்களாலும் இது பரவக்கூடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. கொரோனா வைரஸ் படர்ந்துள்ள உலோகம் அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றை தொடுவதன் மூலம் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் பரவக்கூடும் என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.