சென்னையில் மீண்டும் பல பகுதிகளில் வெள்ளம்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. மேலும் வீராணம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நிவர் புயலுக்கு பிறகு மீண்டும் கனமழையை எதிர்கொண்டு வரும் சென்னை மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் தத்தளிக்க தொடங்கியுள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.