செனட்டர் ட்ரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க பிரேரணை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பதவிப் பறிப்புத் தீர்மானத்தை விசாரிக்க செனட் சபை உறுப்பினர்கள் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோ ராபர்ட்ஸ் முன்னிலையில் செனட் சபை உறுப்பினர்கள் பாரபட்சம் இல்லா நீதியை வழங்குவோம் என்று உறுதி ஏற்றனர்.

இனி வரும் வாரங்களில் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டை விசாரித்து அவர் பதவி விலகப்படுவாரா என்பதை இவர்கள் அறிவிக்க உள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜனவரி 21 ஆம் தேதி தொடங்க உள்ளது.

முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட உள்ள ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு ட்ரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்றும் அமெரிக்க தேச இறையாண்மைக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்றும் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியது.

இதை அடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்கத் திட்டமிட்டு, முதல் கட்டமாக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.