சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்

எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் வழங்கியுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும்,

எதிர்வரும் வியாழக்கிழமை சூரிய கிரகணம் இடம்பெற இருக்கின்றது. இலங்கை நேரப்படி காலை 08.09 மணிமுதல் பகல் 11.22 மணிவரையுள்ள காலப்பகுதிகளில் இது இடம்பெறும்.

இலங்கையில் சூரிய கிரகணம் தெளிவாக தென்படும். அன்றைய தினம் ஆஞ்சநேயர் ஜெயந்தி தினமுமாதலினால் காலை பூஜைகள் காலை 8 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

பின்னர் காலை 8.05 மணியளவில் ஆலயங்கள் நடைசாத்தப்பட்டு பகல் 11.30 மணிக்கு பின்னர். பரிகார வழிபாடுகளின் பின்னர் திறக்கப்படும்.

எனவே அதற்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் ஆலயங்களில் எவ்விதமான வழிபாடுகளும் இடம்பெறமாட்டாது. இந்த கிரகண காலப்பகுதிகளில் உணவுகள் சமைப்பது அல்லது உட்கொள்ளுவதை தவிர்த்துக் கொள்ளவும்.

இக்காலத்தே உண்ணும் சமைக்கும் உணவுகள் சூரியனில் இருந்து வரும் செவ்வூதாக் கதிர்களால் நஞ்சாகும் தன்மை உடையன.

அதனால் அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். அவ்வாறு உணவுகள் இருந்தால் அவற்றைத் தர்ப்பை புல்லினால் மூடி வையுங்கள். அதன் பின்னர் அவற்றைப் பாவிக்கலாம்.

வெற்றுக்கண்ணினால் சூரியனை இக்காலப்பகுதிகளில் பார்ப்பதனைத் தவிர்க்கவும் ஈரத்துணி கொண்டு பார்க்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் இக்காலப் பகுதிகளில் வெளியில் செல்வதையோ அல்லது சூரிய கிரகணத்தினை பார்ப்பதனையோ தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.