“சீரமைப்போம் தமிழகம்” – சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய கமல்

சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை “சீரமைப்போம் தமிழகம்” என்ற பெயரில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன்,

“ஆளும் கட்சியினருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. எங்களுக்கு ஆதரவு பெருகும் என்பதால் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்துள்ளானர். சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன். மதுரை எனக்கு நெருக்கமான ஊர் என்பதால் இங்கு பிரசாரத்தை தொடங்குனேன்.

சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். பாஜக ரஜினியை வைத்து சினிமா எடுப்பதற்காக வேண்டுமானால் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள். நான் நாத்திகாவதி அல்ல பகுத்தறிவுவாதி. அதேசமயம், மக்களின் நம்பிக்கைக்கு எதிராக நான் இருக்கமாட்டேன். விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் வேளாண் சட்டங்கள் இருப்பதாக அவர்கள் கருதுவதால் டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்.

இந்தியாவில் விவசாயிகள் பட்டினியால் இருக்கும்போது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டியது அவசியம்தானா. எம்.ஜி.ஆரும் நானும் நடிகர்கள் தான்.

நான் ஒரு நடிகர் என்பதைத்தாண்டி என்னை மக்கள் பார்க்க வருகிறார்கள், அமைச்சர்கள் என்னுடைய கூட்டத்தை பார்த்து தூக்கம் வராத நிலையில் உள்ளனர், எங்களை யார் என கேட்டவர்கள் தற்போது எங்களின் வெற்றி குறித்து கணக்கு எடுத்து வருகிறார்கள்”  என்றார்.