சீனாவின் காலனித்துவத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர முயற்சி – முருத்தெட்டுவே தேரர்

நாட்டை சீனாவின் காலனித்துவத்தின் கீழ் இலங்கையைக் கொண்டுவருவதை எதிர்ப்பதாகவும், அதற்காக மக்கள் இந்த அரசாங்கத்தைத் தெரிவுசெய்யவில்லை எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் தொடர்பில் நேற்று கொழும்பு அபயராமய விஹாரையில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

“கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் இலங்கையை சீனாவின் காலணியாக்குவதற்குத் திட்டமிடப்படுகின்றது. அதற்கு நாம் தயாராகவில்லை. இந்த துறைமுக நகர் உருவாக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணம் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நாட்டின் 14 சட்டங்களிலிருந்து துறைமுக நகர் விடுவிக்கப்படுகின்றது. சீனாவின் காலணித்துவத்தின் கீழ் இது மாற்றப்படுகின்றது என்பது இதன்மூலம் தெளிவாகின்றது.

நாட்டை மேம்படுத்துவதற்கே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தார்களே தவிர, அதனை விற்பதற்கோ அல்லது குத்தகைக்கு விடுவதற்கோ அல்ல. இந்த நாட்டின் வரைபடம் கூட மாற்றமடைகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.