சிறைக்கைதிகளால் தோற்றடிக்கப்பட்ட ஐரோப்பாவின் மிகச் சிறந்த இராணுவம் -வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் களமுனையில் கடந்த சில வாரங்களில் மிக முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. கிழக்கு உக்ரைனின் டொனஸ்க் பகுதியில் உள்ள பக்மன்ட் பகுதியை ரஸ்யா கைப்பற்றியுள்ளது. 72,000 மக்கள் தொகையை கொண்ட இந்த பகுதி உக்ரைனின் வினியோக வழிகளுக்கான முக்கிய பகுதியாகும்.

இங்கு கடந்த வருடம் செப்ரம்பர் மாதம் உக்கிரமடைந்த சமர் ஏறத்தாள 10 மாதங்களின் பின்னர் கடுமையான இழப்புக்களுடன் முடிவடைந்துள்ளது.

இந்த சமரில் ரஸ்யா தனது படையினரை அதிகம் ஈடுபடுத்தவில்லை. தனியார் கூலிப்படையான வெக்னர் குழு என்ற குழுவையே பயன்படுத்தியுள்ளது. இந்த குழுவின் தலைவர் பிரிகோசின் என்பவர் முன்னர் உணவு விடுதி நடத்தியவர் பக்மன்ட் பகுதியில் சமரில் ஈடுபட்ட அவரது படையணியில் இருந்த 60,000 படையினரில் 50,000 பேர் ரஸ்யாவில் உள்ள சிறைகளில் இருந்து திரட்டப்பட்ட குற்றவாளிகள்.

மறு தரப்பில் நேட்டோவினால் பயிற்சி அளிக்கப்பட்ட நேட்டோவின் ஆயுதங்களை கொண்ட 150,000 மேலான உக்ரைன் வீரர்கள். ஆனால் 10 மாதங்கள் நடைபெற்ற சமரின் முடிவில் 31 நாடுகளை கொண்ட நேட்டோ கூட்டணியை உணவு விடுதி உரிமையாளர் தலைமையிலான சிறைக் கைதிகள் முறியடித்துள்ளது மிகவும் ஆச்சரியமானது என்கிறார் கிழக்கு ஐரோப்பிய படைத்துறை ஆய்வாளர் ரெலர் டுடீன்.

இந்த சமரில் 50,000 இற்கு மேற்பட்ட உக்ரைன் படையினர் கொல்லப்பட்டதுடன், 70,000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் 10,000 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். வெக்னர் குழு தரப்பில் 10,000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 12,000 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த களமுனைக்கு அனுப்பப்படுபவர்களின் ஆயுட்காலம் 4 மணிநேரமே என்பதும் மிகவும் ஆச்சரியமாக பேசப்பட்ட விடையம்.

யப்பானில் இடம்பெற்ற ஜி-7 பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் உக்ரைன் அதிபர் பங்குபற்றிய சமயம் கடந்த 20 ஆம் நாள் பக்மன்ட் பகுதியை கைப்பற்றியதாக வெக்னர் குழு அறிவித்ததும் நேட்டோவுக்கு கிடைத்த பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.

1980 களின் பின்னர் இடம்பெற்ற மிக நீண்ட மற்றும் அதிக உயிரிழப்புக்களை கொண்ட சமர் இதுவாகும். இந்த சமரை தொடர்ந்து வெக்னர் குழுவின் தரமும் உயர்ந்துள்ளது. அவர்கள் சொந்தமாக ஆட்லறி பீரங்கிகள், தாக்குதல் விமானங்கள், தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் செய்மதிகளையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பக்மட் களமுனை பாதகமான களமுனை அங்கு சமரில் ஈடுபடுவது என்பது உக்ரைன் படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட கருத்துகளை உக்ரைனும், மேற்குலகமும் எற்கவில்லை.  அங்கு 2014 ஆம் ஆண்டில் இருந்து நேட்டோ நாடுகளால் பயிற்சி கொடுக்கப்பட்ட  ஏறத்தாள 5 டிவிசன்களை தற்போது உக்ரைன் இழந்துள்ளது. இது அவர்களின் படை பலத்தில் கணிசமான தாக்கமாகும்.

கடந்த வருடம் கேர்சன் பகுதியில் உக்ரைன் ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொள்ள முற்பட்ட சமயம் ரஸ்யா தனது படையினரை ஆற்றின் மறுகரையை நோக்கி உள்வாங்கியிருந்தது. அந்த பின்வாங்கலை அவர்கள் தோல்வியாக கருதவில்லை. 30,000 படையினரை காப்பாற்றிய வெற்றியாகவே கருதினார்கள்.

பக்மன்ட் களமுனை என்பது உக்ரைனின் படை பலத்தை அழிப்பதற்கு ரஸ்யா வைத்த பொறி என இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பல படைத்துறை அவதானிகள் தெரிவித்திருந்தனர். எனவே அங்கிருந்து படையினரை பின்வாங்க செய்வதன் மூலம் உக்ரைன் தனது படை பலத்தை தக்கவைக்கலாம் எனவும் அவர்களை வேறு ஒரு சாதகமான களமுனையில் தாக்குதலுக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேற்குலகத்திடம் இருந்து பணத்தையும், ஆயுதங்களையும் பெறுவதற்கு களமுனையில் ஒரு முன்னேற்றம் தேவை என்பதை நினைத்து அவர்கள் பாதகமான களமுனையை தேர்ந்தெடுத்ததே இந்த அழிவுக்கான காரணம்.

ஐரோப்பாவில் உள்ள படையினரில் உக்ரைன் இராணுவம் மிகவும் தரம் வாய்ந்தது என கருதப்படுகின்றது. அவ்வாறு தரம்வாய்ந்த படையினருக்கு ஆயிரக்கணக்கான கவச வாகனங்கள், 2 மில்லியன் எறிகணைகள், 9,000 ஏவுகணைகள், பெருமளவான வான் எதிர்ப்பு சாதனங்கள், நேட்டோவின் செய்மதி உளவு தகவல்கள், நேட்டோ படை அதிகாரிகளின் வழிநடத்தல்கள் எல்லாம் வழங்கப்பட்ட போதும் பக்மட் பகுதியை அவர்கள் இழந்தது உலக நாடுகளில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த தோல்வியில் இருந்து மீளவதற்காக அல்லது அந்த செய்தியை மறைப்பதற்காக உக்ரைனுக்கு உடனடியான ஒரு தாக்குதல் வெற்றி தேவைப்பட்டது. அதற்காக அவசரமான திட்டம் ஒன்று தீட்டப்பட்டது அதாவது ரஸ்யாவின் எல்லைக் கிராமம் ஒன்றை பதிலடியாக கைப்பற்றுவது.  அதன் மூலம் ரஸ்யா பலவீனமானது என்பதை உலகிற்கு காட்டுவது தான் திட்டம். ஆனால் உக்ரைன் படையினருக்கு ஒன்று தெரியும் அதனை தக்கவைக்க முடியாது என்பது.

இந்த தாக்குதலுக்காக 130 சிறப்பு படையினர், இரண்டு டாங்கிகள், 1 துருப்புக்காவி வாகனம், 9 கவச வாகனங்களுடன் தாக்குதல் அணி நகர்ந்தது. அவர்களுக்கு ஆதரவாக மோட்டார் படையணி மற்றும் பீரங்கி படையணியினர் தாக்குதல் நடத்த தயாராக இருந்தனர்.

பெல்கொரோட் பகுதியை கைப்பற்றுவதே திட்டம், நகர்ந்த படையணி கிரைவோரன் பகுதியில் உள்ள காவல் நிலையை தகர்த்து இலகுவாக குளோரோஸ்கி பகுதிக்குள் உள்நுளைந்து விட்டது. ஆனால் விரைவாக செயற்பட்ட ரஸ்யாவின் சிறப்பு படையினர் இரவோடு இரவாக உக்ரைன் படையினரை மேலும் நகராதபடி குளோரோஸ்கி பகுதிக்குள் முடக்கிவிட்டனர்.

செய்மதி உளவுத்தகவல்களின் மூலம் உக்ரைன் படையினரின் நடமாட்டங்களை அவதானித்த ரஸ்யா, தனது எம்.ஐ-8 மற்றும் எம்.ஐ-24 வகை தாக்குதல் உலங்கு வானூர்திகளையும் பதில் தாக்குதலுக்கு பயன்படுத்தியிருந்தது. 12 மணிநேரத்திற்குள் உக்ரைன் படையனரின் நகர்வை முறியடித்த ரஸ்யா 24 மணிநேரத்திற்குள் தனது நடவடிக்கையை முடிந்துவிட்டது. இந்த பதில் நடவடிக்கையை ரஸ்யா படையினரின் கேணல் ஜெனரல் அலக்சான்டர் லிபின் வழிநடத்தியிருந்தார்.

தோல்வியில் முடிந்த இந்த தாக்குதலில் உக்ரைன் படையினர் 70 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்ததுடன், பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர். அமெரிக்க தயாரிப்பான இரண்டு M1224 MaxxPro கவச வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டு HMMWV M1151A1 சேதமடைந்தன. HMMWV M1152A1துருப்புக்காவி வாகனம் அழிவடைந்தது, இவைதவிர போலந்து மற்றும் உக்ரைன் தயாரிப்பு கவசவாகனங்களும் அழிக்கப்பட்டன.

பல ஆயிரம் நீளமான ரஸ்யாவின் எல்லை பாதுகாப்பை மறுசீரமைக்க வேண்டிய நிலையை இந்த தாக்குதல் ரஸ்யாவுக்கு உருவாக்கியுள்ளது. அதற்கு ரஸ்யாவுக்கு அதிக படையினர் தேவைப்படலாம் என உக்ரைன் எண்ணுகின்றது. அதேசமயம், இந்த தாக்குதலில் அமெரிக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதும், இந்த தாக்குதலை ரஸ்யா ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும் 8 பொதுமக்கள் கயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளதும் அமெரிக்காவக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் சமரில் ஒரு எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்பதால் மேற்குலகம் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் எப்-16 வகை தாக்குதல் விமானங்களை வழங்கும் நிலைக்கு தற்போது சென்றுள்ளன. ஆனால் அவை களமுனையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை விட இந்த போரை மேலும் அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்பது தான் உண்மை.