சிறீலங்கா அரசின் தடைப் பட்டியல் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி விமர்சனம்

சிறீலங்கா அரசு வெளியிட்ட தான்தோன்றித்தனமான தடைப் பட்டியலின் நோக்கம்,  இலங்கைத் தீவில் முன்னர் இடம்பெற்ற மற்றும் தற்போதும் தொடரும் மனித உரிமை மீறல்களைப் புலம்பெயர் தமிழர்கள் – குறிப்பாகத் தமிழ்க் கனேடியர்களும், அமைப்புக்களும் – விமர்சிக்காதிருக்க அவர்களை மௌனமாக்குவதே  என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறீலங்கா அரசு 2021 பெப்ரவரி 25 ஆம் திகதியிட்ட வர்த்தமானியில் பிரசுரித்த பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் எனக்குத் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது என அந்த அறிக்கையில் ஹரி ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் தமிழ்க் கனேடிய அமைப்புக்கள் சிலவும், ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதியில் வசிப்போர் உட்பட, தனிநபர்களின் பெயர்களும் அடங்கியுள்ளன. இலங்கைத் தீவில் முன்னர் இடம்பெற்ற மற்றும் தற்போதும் தொடரும் மனித உரிமை மீறல்களைப் புலம்பெயர் தமிழர்கள் – குறிப்பாகத் தமிழ்க் கனேடியர்களும், அமைப்புக்களும் – விமர்சிக்காதிருக்க அவர்களை மௌனமாக்குவதே இந்தத் தான்தோன்றித்தனமான பட்டியலின் நோக்கம்.

இந்தப் பட்டியலில்  இணைக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், பட்டியலில் இருப்போரின் உரிமைகளையும், சுதந்திரங்களையும் இடருக்குள்ளாக்குகிறது. சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் முன்னைய மற்றும் தொடரும் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வழங்கத் தவறியமைக்காக  சிறீலங்கா  அரசை கவனத்தில் கொண்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிவித்த ஒருசில நாட்களில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டமை தற்செயலானதல்ல.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் ஆயுதப்போரின் முடிவின்போது வகித்த பங்குக்காகப் போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்ன என்பவர் இந்தப் பட்டியலிடுதலை செயற்படுத்தியமை முரண்நகையாக அமைகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடைந்த தோல்வியில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கான சிறீலங்கா அரசின் தீயநோக்குள்ள செயலாக இது அமைகிறது. மாற்றுக் கருத்துக் கொண்டோருக்கு எதிரான இந்த நடவடிக்கை நேர்மையான சில தமிழ் அமைப்புக்களையும், தமிழ்க் கனேடியர்களையும் களங்கப்படுத்துவது வருத்தமளிக்கிறது. பட்டியலிட்ட நடவடிக்கையை முற்றாக மீளப்பெறுமாறு நான் வலியுறுத்துவதுடன், பட்டியலிடப்பட்டோரின் இலங்கைத் தீவில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறீலங்கா அரசிடம்  கோருகிறேன்.

பட்டியலிடப்பட்டமையால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் சிறீலங்கா அரசு மன்னிப்புக் கோருவதும் அவசியமானது எனவும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி விமர்சித்துள்ளார்.