சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை – ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு

படுகொலை குற்றவாளியை விடுதலை செய்யும் சிறீலங்கா அரசின் நடவடிக்கை அங்கு நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழுவின் பேச்சாளர் ரூபெட் கொல்விலே மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பிரச்சனைக்குரியது. சிறீலங்கா நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட கொலைக் குற்றவாளியான இராணுவ அதிகாரி சுனில் ரட்நாயக்காவை சிறீலங்கா அரசு விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

ஐந்து இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டபோதும் ஒருவர் தான் தண்டிக்கப்பட்டார். ஆனால் அவரையும் சிறீலங்கா அரசு தற்போது விடுதலை செய்துள்ளது.

இது சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை காண்பித்துள்ளது. சிறீலங்காவின் இந்த நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.