சிறிலங்காப் பாராளுமன்றம் ஒரு சட்டவிரோதக் கூடாரம்- சூ.யோ.பற்றிமாகரன்

சிறிலங்காப்பாராளுமன்றத் தேர்தல் 2020 ;சிறிலங்காப் பாராளுமன்றம் சட்டவிரோதக் கூடாரம்.பாராளுமன்றம் செல்வதால் எவ்விதமான பயனுமில்லை,
தமிழர்களின் அரசியல் அனுபவத்திற்குச் சிறிலங்காவின் முன்னாள் நிதி மற்றும் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சர் வெளிப்படையாக ஒப்புதல்

• ஈழத்தமிழர்கள் 72 ஆண்டுகளாகப் பேசும் உண்மையைச் சிங்களவர்களும் வெளிப்படையாகப் பேசத் தொடங்குகிறார்கள்
• ஆளுங்கட்சிக் கொள்கையும் செயற்பாடுகளும் :- பொருளாதார நெருக்கடிகளைச் திசைதிருப்ப இனவாதச் செயற்பாடுகள், இனவாதச் செயற்பாடுகளை உறுதிப்படுத்த இராணுவமயமாக்கல்
• மிருசுவிலில் சிறுகுழந்தை உள்ளடங்கலான படுகொலையாளனின் மன்னிப்பிலோ,கொரோனா மரணங்களில் முஸ்லீம்களின் இறுதிக்கிரியைகள் குறித்த மதசுதந்திர மறுப்பிலோ தமிழர்கள் சார்ந்தோ அல்லது முஸ்லீம்கள் சாரந்தோ எந்தவிதமான பிரதிபலிப்புகளும் எதிர்க்கட்சியிலும் வெளியாகவில்லை
• இன்றைய உலகின் முன்னணி அரசியல் கொள்கையான தாராளவாத சனநாயகத்திற்கு சிறிலங்காவில் இடமேயில்லை
• சூழவுள்ள அடிப்படைக் கடும்போக்குவாதிகளுக்காகச் சிங்கள அரசியல்வாதிகள் மௌனமாகி யதார்த்த பூர்வமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாது கைவிடுகின்றனர்
• இன மத மொழி பேதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைப்பதே நாட்டில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமையும். பொறுத்திருந்து பாருங்கள். இது எதிர்காலத்தில் நிகழும்.

சிறிலங்காவின் 9 வது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெற இருப்பதாகச் சிறிலங்கா பிரகடனப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா என்னும் சட்டவிரோத சிங்கள பௌத்த குடியரசு 22.05.1972இல் தான் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத அரசியலமைப்பு மூலம் திணிக்கப்பட்டது.

ஆனால் தங்களின் இந்தச் சட்டவிரோத பாராளுமன்ற உருவாக்கலை உலகுக்கு மூடிமறைக்கும் தந்திரோபாயமாக 04.02.1948இல் பிரித்தானியக் காலனித்துவம் சோல்பரி அரிசயலமைப்பு மூலம் உருவாக்கிய இலங்கைப்பாராளுமன்றத்தின் தேர்தல்களையும் உள்ளடக்கி 9வது பாராளுமன்றத் தேர்தல் என்று சட்டவிரோதமாக எண்ணிக்கையிடும் பழக்கம் சிறிலங்காவின் வழக்கமாக உள்ளது.SL Independence சிறிலங்காப் பாராளுமன்றம் ஒரு சட்டவிரோதக் கூடாரம்- சூ.யோ.பற்றிமாகரன்

1972 முதல் இலங்கைத் தமிழர்கள் சிறிலங்காப் பாராளுமன்றம் சட்டவிரோதக் கூடாரம் எனச் சொல்லி வந்த இந்த உண்மையை 72 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சராகவும் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சராகவும் திகழ்ந்த சிங்களத் தலைமையான மங்களசமரவீரா, இன்று வெளிப்படையாகத் தனது செவ்வி மூலம் உலகுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

சிறிலங்காப் பாராளுமன்றத்தின் இயல்பு நிலைகள் குறித்த உண்மை

1975ம் ஆண்டிலயே தமிழர்களின் அன்றையத் தலைமையாக இருந்த தந்தை செல்வநாயகம் அவர்கள் சிறிலங்காப் பாராளுமன்றத்தின் உள்ளேயே வெளிப்படையாக அப்பாராளுமன்றத்தின் தமிழர்களை ஆள்வதற்கான சட்டத்தகுதியின்மையினை எடுத்து விளக்கி விட்டுத் தமிழர்களின் பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையினைப் பிரகடனப்படுத்தி ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

இவ்விடத்தில் மௌனமாக இருந்த சிங்கள மிதவாத அரசியல்வாதிகள் சிங்கள பௌத்தப் பேரினவாதம் பொருளாதார நெருக்கடிகள் வருகின்ற பொழுதெல்லாம் இனவாதத்தைத் தூண்டி அந்த இனவாதத்தை உறுதிப்படுத்த இராணுவமயமாக்கலை ஆள்வதற்கான கருவியாகவே கையாண்ட பொழுது மௌனமாக இருந்து தங்களின் இனத்திற்கான எழுச்சியாகக் கருதினர்.

இன்று இந்த மனிதனை மனிதனைப் படைபலம் கொண்டு அடக்கும் ஆட்சிமுறையினை அவர்கள் மேலேயே கோத்தபாய அரசு திசைதிருப்பியுள்ள நிலையிலேயே சிறிலங்காப் பாராளுமன்றம் சட்டவிரோதக் கூடாரம் என்ற கருத்தை சிங்கள மிதவாதத் தலைவர்களுள் ஒருவரும் சிறிலங்காவின் சட்டவாக்கத்திலும் நிர்வாகத்திலும் நேரடியாகப் பங்கு பற்றிய அனுபவம் உள்ளவருமான முன்ளாள் அமைச்சர் மங்களசமரவீர முன்வைத்துள்ளதுடன் அங்கு செல்வதால் எந்தவிதமான பயனும் இல்லை எனவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

சனநாயகத்திற்கான சட்டத்தின் ஆட்சி இழப்பும்
உள்ளகத் தன்னாட்சி உரிமையின் மறுப்பும்

மிருசுவிலில் சிறுகுழந்தை உள்ளடங்கலான படுகொலையாளனின் சிறிலங்காவின் உயர் நீதிமன்றத் தண்டனைத் தீர்ப்பை கொரோனா காலத்தைப் பயன்படுத்திச் சிறிலங்காவின் இன்றைய அரசஅதிபர் கோத்தபாயா தனது அரசஅதிபர் என்கிற பதவிநிலை அதிகாரத்தைக் கொண்டு மன்னித்து அவரை விடுதலை செய்த விடயத்திலும், கொரோனா மரணங்களில் முஸ்லீம்களின் இறுதிக்கிரியைகள் குறித்த அரசாங்கத்தின் தலையீட்டால் அவர்களின் மதசுதந்திரம் மறுக்கப்பட்ட விடயத்திலும் தமிழர்கள் சார்ந்தோ அல்லது முஸ்லீம்கள் சாரந்தோ எந்தவிதமான பிரதிபலிப்புகளும் எதிர்க்கட்சியிலும் வெளியாகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி தனது தனிவழி அரசியல் பயணத் தீர்மானத்திற்கு இந்த சிறிலங்காவின் ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் இனத்துவச் சிறுபான்மையினங்களின் மனிதஉரிமை மீறலே அடிப்படைக்காரணியென விளக்கியுள்ளார்.625.368.560.350.160.300.053.800.560.160.90 சிறிலங்காப் பாராளுமன்றம் ஒரு சட்டவிரோதக் கூடாரம்- சூ.யோ.பற்றிமாகரன்

இதன்வழி இனத்துவச் சிறுபான்மையினங்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வை வழங்க வேண்டும் என்னும் அவ்வினங்களைத் தாம் ஆள்வதற்கான அடிப்படை நிபந்தனையை, அவர்களின் உள்ளக தன்னாட்சி உரிமையைச் சிறிலங்கா மீறிவிட்டதால் சிறிலங்கா அரசாங்கம் அவர்களை ஆள்வதற்கான தகுதியற்ற சட்டவிரோத அரசாக மாறிவிட்டதை அவர் தெளிவாக்கியுள்ளார்.

இராணுவ ஆட்சியை சனநாயகப்
பின்னணியில் நடைமுறைப்படுத்தல்

அனைத்துலக அளவில் ஏற்படுத்தி வருகின்ற சிறிலங்காவைத் தனிமைப்படுத்தும் செயற்பாடு வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது என்பதையும் அதே வேளை கொரானாவுக்கு பின்னதான பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு சிறிலங்கா அனைத்துலக உதவிகளைப் பெறுவதில் ஏற்படப் போகும் புதிய சூழ்நிலைகள் தோற்றுவிக்கக் கூடிய மக்கள் எழுச்சிகளை அடக்குவதற்கு பிரகடனப்படுத்தப்படாத இராணுவ ஆட்சி தேவையாகிறது என்பதனை எடுத்து உரைக்கும் சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர்,அதனை இனவாதிகளின் ஆர்ப்பரிப்புக்கு ஆதரவாக இராணுவத்தை மக்கள் ஆட்சிக்குள் கொண்டு வருவதன் மூலம் இன்றைய அரசஅதிபர் வெகு தந்திரமாகச் செயற்படுத்துவதை அவர் எடுத்து விளக்கியுள்ளார்.

தாராளவாத சனநாயகத்திற்கு இடமின்மையும்
யதார்த்தததை மறுக்கும் இனக்கடும்போக்குவாதமும்

சிறிலங்கா அரசாங்கத்தின் இன்றையப் போக்கில் அதன் அரசியலில் தாராளவாத சனநாயகம் என்னும் இன்றைய உலகின் சனநாயகத்தின் சுதந்திர சமத்துவ சகோதரத்துவ பங்களிப்புக்கான மக்கள் வாழ்வில் மிகமிகக்குறைந்த அளவில் அரசாங்கம் தலையீடு செய்தல் என்னும் முறைமை இலங்கையில் நடைமுறைச்சாத்தியமற்றதாகி விட்டதை சிறிலங்காவின் முன்னாள் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்களசமரவீரா வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நேரத்தில் சிங்கள அரசியல்வாதிகள் யாராவது யதார்த்தத் தீர்வை முன்னெடுக்க இயலாதவாறு இனக்கடும்போக்குவாத ஆதரவு அவர்களைத் தடுக்கிறது என்பதையும் முன்னாள் அமைச்சர் விளக்குகின்றார். இதன் மூலம் சிறிலங்கா சனநாயக ஆட்சி முறையில் இருந்து பாராளமன்றக் கொடுங்கோன்மை ஆட்சிக்குள் சென்று விட்டதை மட்டும் அல்ல பெரும்பான்மையினர் சொல்வதைச் சிறுபான்மையினர் ஏற்றேயாக வேண்டும் என்னும் வலுக்கட்டாயப்படுத்தலை சிறிலங்கா அரசாங்கம் தன் கொள்கையாக்கியுள்ளதை இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றார்.maxresdefault 1 சிறிலங்காப் பாராளுமன்றம் ஒரு சட்டவிரோதக் கூடாரம்- சூ.யோ.பற்றிமாகரன்

இதனால் தான் இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை எனவும் பெரும்பான்மையினர்க்கு எதிராக எந்தவித அரசியல் அதிகாரப்பரவலாக்கத்தையும் அரசாங்கம் செய்யமாட்டாது என்ற பிரகடனங்கள் அமைகின்றன. எங்கள் நாடு,எங்கள் ஆட்சி, எங்கள் பௌத்த ஆகமம் என்னும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்ச ஆட்சியாளர்கள் தாங்களே எனத் தம்மை வெளிப்படுத்தும் இராஜபக்ச குடும்பம் தங்கள் குடும்பத்தின் ஆட்சியை உச்சப்படுத்த குடும்பவளத்தை மேலும் பெருக்க மக்கள் ஆட்சி என்ற பெயரில் செயறட்படுவதை அவர் செவ்வி மறைமுகமாக விளக்குகிறது.

அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அடையாளமாகத் தன்னை வலுக்கட்டாயமாக நிறுவிக் கொள்ளும் இரணில் விக்கிரமசிங்க இந்த சிங்கள பௌத்த பேரினவாதத்தை இலங்கைத்தீவின் ஆட்சியாகவே மாற்றிவரும் ராஜபக்ச குடும்பத்தை அனைத்துலக நாடுகளின் தனிமையாக்கத்தில் இருந்து தடுக்கும் ஒரு கரமாகவும் இந்திய நிதி உதவிகளைப் பெற்றுக்கொடுத்து இந்த ஆட்சிக்கு தலைமைப் பிரச்சினையாக உள்ள வெளிநாட்டுக் கடன் பிரச்சினையை உடன் சமாளிக்கும் ஆற்றலாக மற்றைய கரமாகவும் மாறிக் கட்டி காத்துவரும் உண்மைநிலையினையும் இதிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சியை விடுவிக்கும் ஆற்றலாக முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாசா அவர்களின் மகன் சஜிவ் பிரேமதாசாவை ஐக்கிய கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்த்த போதிலும் இனக் கடும்போக்காளர்களின் வாக்கின் மேல் நம்பிக்கை வைத்துவிட்ட அவராலும் அதனைச் செய்ய இயலாமை இயல்பாகி இனமதமொழி வெறிச்செயற்பாடுகளில் மௌனித்தத் தன் தலைமையை பௌத்த சிங்களத்தலைமையாகவே மாற்றி விட்டதையும் அவரின் முன்னாள் நெருங்கிய ஆதரவாளரான மங்களசமரவீரா வெளிப்படுத்துகின்றார்.

இதனால் சிங்கள பௌத்த பேரிவாதம் எதிர்ப்பற்ற முறையில் வேகமாக முன்னேறி இன்று சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கான இராணுவவாதம் உலக நாடுகள் அமைப்புகள் குறித்த எந்த எந்தவித அச்சமுமின்றி வெளிப்படையான அரசியல் தத்துவமாக இலங்கையில் தன்னை நிறுவி பாராளுமன்ற கொடுங்கோன்மைக்கான இராணுவ ஆட்சியாக அரசின் மக்கள்நிர்வாகங்களையும் கையகப்படுத்தி வேகம் பெற்று வருகிறது.

தீர்வாக இனமதமொழி பேதமின்றி
மக்களை இணைத்தாலே மாற்றம்

தன்னுடைய பேட்டியில் முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரா அவர்கள் “இன மத மொழி பேதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைப்பதே நாட்டில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமையும். பொறுத்திருந்து பாருங்கள். இது எதிர்காலத்தில் நிகழும்” என்பதனையே பாராளுமன்ற கொடுங்கோன்மையும் இராணுவ ஆட்சியும் இணைந்த இலங்கையின் இன்றைய ஆட்சி மாற்றத்திற்கு மாற்றுவழியாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு மதசார்பற்ற அரசாக இலங்கையின் அரசை பகிரங்கமாக அறிவிக்க அவரால் வார்த்தையளவில் என்கிலும் இயலுமா? மொழிகளுக்கும் இனங்களுக்கும் சமத்துவம் உள்ள அரசாக இலங்கை அரசாங்கம் ஒன்றை நடைமுறைப்படுத்த முடியுமா? அவரால் இனஅழிப்புகளைப் பகிரங்கமாக ஏற்கும் தன்மையுடன் மாற்று நீதியையும் மாற்று நட்டஈடுகளையும் நிலைநாட்டி படைபல ஆக்கிரமிப்புக்களை அடக்குமுறைகளை கைவிட்டுää இராணுவத்தை வெளிநாட்டு தலையீடுகளை மட்டும் தடுக்கும் பாதுகாப்புக் கடமையை மட்டும் செய்ய வைக்கும் நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா?

ஆயினும் ஒரு வழியுண்டு மங்களசமரவீரா இலங்கையின் குடிமக்களான சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகச் சகோதரத்துவக் குடிகளை உங்களுக்கான சுதந்திரமான சமத்துவமான சகோதரத்துவமான பாதுகாப்புடன் கூடிய அமைதியான ஆட்சியைப் பெறுவதற்கான அரசியலமைப்பு நகல் ஒன்றைத் தயாரித்து உதவுங்கள் என அழைப்பு விடுத்துää அதனை நான் முன்னெடுக்க முனைகின்றேன் என்று முன்வருவாரானால் அதற்கான ஆதரவுகளை வழங்கும் நான்கு மக்கள் இனங்களைச் சேர்ந்த நல்லாக்கச் சிந்தனையுள்ளவர்களும் தன்னலமற்ற முறையில் இணைந்து இனமதமொழி பேதமற்ற மக்கள் இணைப்பாகி அடிப்படை அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியும். இலங்கையின் எல்லாக் குடிமக்களின் மனித உரிமைகளையும், தேசப்பங்களிப்புக்களையும் சமத்துவமான முறையில் ஏற்று எல்லா மக்களுக்கான அரசியலமைப்பு ஒன்றை எல்லா மக்களினதும் எல்லாநிலையிலும் உள்ள மக்களின் ஆளுமைகள் இணைந்த சபையினால் உருவாக்கும் நிலையை உருவாக்கினாலே அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பான அமைதி வாழ்வு தரும் நாடாக இலங்கைத்தீவு மாறும்.

இதற்கான கொள்கை விளக்கத் தேர்தல் பிரகடனங்களை உருவாக்கும் தேர்தலாக இத்தேர்தலை மாற்ற முடியுமா? அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக் கூடிய காரியமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.