சிரியாவிற்கு திரும்பிய 500 அமெரிக்க வீரர்கள்

அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இம்மாத தொடக்கத்தில் அறிவித்த நிலையில் 500 அமெரிக்க வீரர்கள் சிரியா திரும்பியுள்ளனர்.

இது குறித்து சிரியா கண்காணிப்புக் குழு கூறும் போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் அல் வாலித் எல்லைப் புறத்தில் சுமார் 85 வாகனங்கள் 500 அமெரிக்க வீரர்களுடன் சென்றனர். மேலும் கடந்த ஐந்து நாட்களாக அமெரிக்க இராணுவ விமானங்கள் பல வடக்குப் பகுதியில் தரையிறங்கி உள்ளன“ என்று தெரிவித்துள்ளது.

ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா   ஞாயிற்றுக் கிழமை அறிவித்த நிலையில், அமெரிக்கப் படைகள் சிரியா விரைந்துள்ளன.

முன்னதாக துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வடக்கு சிரியாவிலிருந்து வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் மீண்டும் சிரியாவிற்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.