ஆஜன்டீனாவிற்கு இடதுசாரி சார்புடைய புதிய அதிபர்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் புதிய அதிபராக, மத்திய இடதுசாரி கொள்கையுடைய எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் ஆல்பர்ட்டோ பெர்னான்டஸ் வெற்றி பெற்றுள்ளார்.

ஏற்கனவே பதவியில் இருந்த பழமைவாத கட்சியின் மௌரிசியோ மக்ரியை, அதிபர் தேர்தலில் 47% இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள ஆல்பர்ட்டோ பெர்னான்டஸ் வென்றுள்ளார். தேர்தலில் வெல்ல குறைந்தபட்சம் 45% வாக்குகளே தேவை.

ஆர்ஜென்டீனா மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வறுமையில் உழலும் நிலையை தற்போதைய பொருளாதார நெருக்கடி உண்டாக்கியுள்ளது.

தனது தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள மௌரிசியோ மக்ரி 40.7% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆட்சி நிர்வாகத்தை முறையாக ஒப்படைக்க அதிபர் மாளிகைக்கு வருமாறு ஆல்பர்ட்டோவிற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Arjentina2 ஆஜன்டீனாவிற்கு இடதுசாரி சார்புடைய புதிய அதிபர்வறுமையை முற்றிலும் ஒழிக்கப் போவதாக மௌரிசியோ மக்ரி உறுதியளித்திருந்தார் எனினும், அவரது நான்கு ஆண்டுகால ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

ஆல்பர்ட்டோ பெர்னான்டஸ் தேர்தலில் வெல்ல அவருடன் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கிறிஸ்டினா பெர்னான்டஸ் தே கீயர்ச்சனர் ஒரு முக்கிய காரணமாவார்.

2007 முதல் 2015 வரை அதிபர் பதவியில் இருந்த இவர் தமது சமூக நலத் திட்டங்கள் மூலம் ஏழைகளை ஆதரித்தவர்.

அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை என்றாலும், அவருக்காகவே எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களிப்பதாக பலரும் தெரிவித்தனர்.

எனினும், பொருளாதார மேலாண்மையில் பொறுப்பற்றவர் மற்றும் ஊழல்வாதி என்று அவர் மீது விமர்சனங்கள் உள்ளன.

கிறிஸ்டினாதான் இந்த முறை மத்திய இடதுசாரி சார்புடைய எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஓகஸ்ட் மாதம் ஆல்பர்ட்டோ பெர்னான்டஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.