சமாதான முயற்சியின் போது சிறீலங்கா அரசே தன்னை அதிகம் பலப்படுத்திக் கொண்டது – எரிக் சொல்கெய்ம்

விடுதலைப்புலிகள் அதி உச்ச பலமாக இருந்தபோதே பேச்சக்களில் ஈடுபட்டனர், போர்நிறுத்த காலத்தில் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளை விட அதிகமாக தன்னை பலப்படுத்திக்கொண்டது என நோர்வே தலைமையிலான சமாதான தூதுக்குழுவின் பிரதிநிதி எரிக் சொல்கெய்ம் அவர்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு இந்த வாரம் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்த முக்கிய பகுதிகள் வருமாறு:

இந்த சமாதான முயற்சியின் போது நாம் எந்த தரப்பிடம் இருந்தும் நன்மைகளையோ அன்பளிப்புக்களையோ பெறவில்லை. அது தென்னிலங்கையில் நிலவும் தவறான கருத்து. சமாதான காலத்தில் சிறீலங்கா படையினரே தம்மை அதிகம் பலப்படுத்திக் கொண்டனர் விடுதலைப்புலிகள் அல்ல.

இதனை நாம் போரின் இறுதி ஆண்டுகளான 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கண்டிருந்தோம். உலகில் உள்ள அத்தனை நாடுகளின் ஆதரவையும் சிறீலங்கா அரசு பெற்றிருந்தது. அதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அடங்கும். இந்த நாடுகள் சமாதனத்தை விரும்பின, அவர்களுக்கு இரண்டு தெரிவுகளே இருந்தன விடுதலைப்புலிகளா அல்லது சிறீலங்கா அரசா என்பதே. ஆனால் அவர்கள் சிறீலங்கா அரசின் பக்கம் சென்றதால் சிறீலங்கா அரசு தன்னை நன்கு பலப்படுத்திக் கொண்டது.

நாம் 2002 ஆம் ஆண்டு இந்த முயற்சியை ஆரம்பித்த போது, விடுதலைப்புலிகள் 11,000 இராணுவச் சிப்பாய்களைக் கொண்ட ஆனையிறவுத்தளத்தை வீழ்த்தி யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நிலையில் இருந்தனர். யாழில் சிக்கியிருந்த படையினரை மீட்பதற்கு இந்திய உதவ முனவந்திருந்தது. பாகிஸ்தானின் உதவியால் யாழ்குடாநாட்டை சிறீலங்கா அரசு காப்பாற்றியபோதும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதான தாக்குதல் சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்திருந்தது.

அதாவது 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அதி உச்ச பலத்தில் இருந்தனர். அவர்கள் உச்சபலத்தில் இருந்தபோது தான் சமாதானத்திற்கு வந்தனர். அந்த பலத்தை விடுதலைப்புலிகள் முன்னர் எப்போதும் பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.