சர்வதேச தாய்மொழி நாள் பெப்ரவரி 21 – து.கௌரீஸ்வரன்

இலங்கைத் தமிழர்களும் தாய்மொழித் தினமும் – சில அவதானங்கள்

பின்காலனித்துவ, உலகமயமாக்கற் சூழலில் அடையாள அரசியல் மிகவும் பிரதானமானதாக மேலெழுந்து வந்துள்ளது. இந்த அடையாள அரசியலில் ஆதிக்க முறைமைகளும், தற்காப்பு முறைமைகளும் செல்வாக்குச் செலுத்துவதனைக் காண்கின்றோம்.

பல்வகைமைகளின் வித்தியாசங்களை மதித்து வேற்றுமையில் ஒற்றுமை அல்லது ஒருமைப்பாடு காணும் அடையாள அரசியல் ஒரு வகை. இது ஆக்கபூர்வமான, காத்திரமான அடையாள அரசியல் செயற்பாடாக கவனிப்பிற்குள்ளாகின்றது.

பல்வகைமைகளை மறுதலித்து மேலாதிக்கப் பிரிவினருடைய அடையாளங்களை பொதுமைப்படுத்தும் அடையாள அரசியல் இன்னொரு வகை. இதில் தூய்மைவாதம், அடிப்படைவாதம், வகுப்புவாதம், நிறவாதம், பெரும்பான்மைவாதம் முதலியன மேலோங்கிக் காணப்படுகின்றன.

பெரும்பாலும் அடையாள அரசியலின் ஆதாரமாக மொழி விளங்கி வருவதனைக் காணலாம். ஒரு மனிதக் குழுமத்தின் மொழி வெறுமனே தொடர்பாடலுக்கான ஊடகம் மட்டுமல்ல; மாறாக அக்குழுமத்தின் கலைகள், தத்துவம், விளையாட்டு, நம்பிக்கைகள், பொருளியல், அரசியல், சூழலியல், அறிவியல் என ஒட்டுமொத்தமான பண்பாட்டைக் கட்டி வளர்க்கும் ஆதாரமாக விளங்கி வருகின்றது.

ஆகவே ஆக்கபூர்வமான அடையாள அரசியற் செயற்பாடுகளில் சுதேச அல்லது தாய் மொழிகளின் இருப்பும், தொடர்ச்சியும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

வங்காள மொழியினை அரச கரும மொழியாக ஆக்கக் கோரிய வங்கதேச மாணவர்களின் எழுச்சியும் அதன் போது மரணித்த மாணவர்களின் நினைவும் அது தொடர்பான வங்கதேசத்தின் கோரிக்கைகளும் சருவதேச தாய்மொழித் தினத்தை பிரகடனப்படுத்த யுனெஸ்கோவிற்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது.

இந்த வகையில் இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய உலகமயமாக்கல் சூழலின் சவால்களை எதிர்கொண்டு தமது மொழியை ஆதாரமாகக் கொண்ட தம் பண்பாட்டின் தனித்துவங்களைப் பாதுகாத்து அவற்றை வலுவூட்டி முன்னெடுத்தலுக்கான செயற்பாடுகள் குறித்து ஆர்வஞ்செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

உலகந்தழுவி வேற்றுமைகளுள் ஒற்றுமை கண்டு தமிழ்ப்பண்பாடுகளை வளப்படுத்தி வலுவூட்டி முன்கொண்டு செல்வதற்கான காத்திரமான உரையாடல்களை சர்வதேச தாய்மொழித் தினத்தை மையப்படுத்தி உரையாடுவது பொருத்தமாகும். இவ்வுரையாடல்கள் தமிழ் சூழலில் கிழக்கிலங்கையில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு காத்திரமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சருவதேச தாய்மொழி நாள் யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டிலிருந்தே இத்தினத்தினை பிரக்ஞைபூர்வமாகக் கொண்டாடும் நடவடிக்கைகள் கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் தொடங்கப்பெற்றுள்ளன. இதில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினரும்,  கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையும், 2015 இன் பின்னர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பண்பாட்டு பீட மாணவர் அவையின் ஏற்பாட்டில் இந்நாள் கிழக்குப்பல்கலையில் முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. சுதேச மொழிகளின் இருப்பும் முன்னெடுப்பும் குறித்து காத்திரமான உரையாடல்கள் இதில் நடைபெற்றிருந்தன.

மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினரின் செயற்பாடுகள்

இதேவேளை (2002 இலிருந்து) மூன்றாவதுகண் நண்பர்கள் தாம் செயற்பட்ட இடங்களில் தமிழ் மொழியில் துறைசார் அறிவு அனுபவ ஆற்றல்களைப் பகிரும் ஆளுமைகளை அடையாளங்கண்டு அவர்களது இல்லம் சென்று மல்லிகை மலர் கொடுத்து வாழ்த்துக் கூறும் செயற்பாட்டை குறித்த தினத்தில் மேற்கொண்டார்கள்.

பண்டிதர்கள், பாரம்பரியக் கலைஞர்கள், அண்ணாவிமார், பாரம்பரிய வைத்தியர்கள், சோதிடர்கள், ஆசிரியர்கள் எனத் தமிழில் அறிவு அனுபவங்களை வழங்கி வரும் ஆளுமைகள் பலர் வாழ்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள். விசேடமாக சிறுவர் குழுவினர் இச்செயற்பாட்டைச் செய்ய வழிப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

இத்தினத்தில் சிறு சிறு விழாக்களை ஏற்பாடு செய்து நடத்துதல் முக்கியம் பெற்றுள்ளது. இதில் உரையாடல்கள், ஆற்றுகைகள், கௌரவிப்புக்கள் எனப்பல செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

இத்தோடு தாய்மொழி நாள் குறித்த வாழ்த்து மடல்கள், பிரசுரங்கள் தயாரித்து வழங்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரசுரங்களில் 21 ஆம் நூற்றாண்டில் தமிழை வளமூட்டி முன்னெடுத்தலுக்கான உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுவதும் வெவ்வேறு பண்பாடுகளின் அனுபவங்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தகவல் தொடர்பாடல் இணையவழித் தமிழினூடாக ஒன்றிணைந்து காரியமாற்றுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாகவும், வெவ்வேறு பண்பாடுகளின் அனுபவங்களை நேரடியாகத் தமிழுக்குத் தரும் நடவடிக்கைகள் மூலமாகத் தமிழ் மொழியை 21 ஆம் நூற்றாண்டில் உலகின் அறிவு அனுபவங்களை உட்கொண்ட மொழிகளுள் ஒன்றாக  வளமூட்டி வலுவூட்டி முன்னெடுப்பதற்கான பொருத்தப்பாடுகள் குறித்தும் முன்மொழியப்பட்டு உரையாடப்பட்டிருந்தது.

அத்தோடு ஆங்கிலம் வழியாக மட்டுமன்றி நேரடியாக உலகின் அனுபவங்களை அந்தந்த மொழிகளின் மூலத்திலிருந்தே தமிழுக்கு கொண்டு வரும் வல்லமை உலகில் பரந்தும் சிதறியும் வாழும் இலங்கைத்தமிழ் புலம்பெயர் தமிழ் சமூகத்தால்  சாத்தியப்படக்கூடிய வல்லமைகள் குறித்தும் உரையாடப்பட்டிருந்தது.

மேலும் தமிழ் மொழியில் உள்ள ஆண் ஆதிக்க, சாதி மேலாதிக்க மொழியாளுகையின் தன்மைகள் தொடர்பான விமர்சனங்களும் அவற்றை நீக்கி அனைத்து மனிதர்களுக்கும் உரிய மொழியாக மீளுருவாக்குவதின் அவசியம் பற்றியும் காத்திரமான உரையாடல்களும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இவ்வருடம் தமிழிசையால் எழுவோம் என்ற தொனிப்பொருளில் தமிழ் மொழியின் இருப்பிற்கும், வளர்ச்சிக்கும் வரலாறு நெடுகிலும் அடிப்படையாக இருந்து வரும் இசைமொழியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் மூன்றாவதுகண் நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதாவது தமிழ்ப்பண்பாட்டில் அறிவியலையும், புதிய அனுபவங்களையும் வெகுசனப்படுத்துவதில் இசைமொழியின் வகிபாகம் குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகின்றது. தமிழ்ப்பண்பாட்டில் சவால்கள் பல தோன்றிய போது அச்சவால்களை எதிர்கொண்டு தமிழ்ப்பண்பாடுகளை உயிர்ப்புக் கெடாமல் தழைத்தோங்கச் செய்வதில் தமிழில் உள்ள பல்வேறு இசைமொழிகளும் இதனைக் கையாண்ட இசைக்கலைஞர்களது செயற்பாடுகளும் கவனிப்பிற்குரியவையாகவுள்ளன.

குறிப்பாக இலங்கைத் தமிழ் இசைமொழியின் வரலாற்றில் பல்வேறு வித்தியாச வித்தியாசமான உள்ளுர் இசை வடிவங்களும், இசை ஆற்றுகைகளும் இடம்பெற்று வருவதனைக் காண்கின்றோம். இவற்றை மேற்கொள்ளும் கலைஞர்களும் செயற்பாட்டாளர்களும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தத்தமது சொந்த முயற்சியையும் அர்ப்பணிப்பையும் மூலதனமாகக் கொண்டே இத்தகைய முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே இத்தகைய பல்வகையான உள்ளுர்த் தமிழ் இசைமொழியின் முக்கியத்துவத்தையும் உள்ளுர்த் தமிழ் இசைமொழியாளர்களையும் அடையாளங்கண்டு அவர்களினது செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை பொதுவெளியில் உரையாடலுக்குக் கொண்டு வந்து அவர்களை மாண்பு செய்து மேலும் தமிழ் இசைமொழியின் பல்வகைப்பரிமாணங்களுடாக உலகெலாம் தமிழ் மொழி தழைத்தோங்கப் பணி செய்வோம்.