(சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

விளிம்புநிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களே இருந்தன. இந்த ஆரம்ப கால அரசசாரபற்ற நிறுவனங்கள் சமூக நலனுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து இயங்கியதால் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இந்த ஆரம்பகால நிறுவனங்கள் ஒரு நற்பெயரை தேடிக்கொடுத்தன.

80களில் தான் அரசசார்பற்ற நிறுவனங்களின் தொகை பிரமிப்பை தரும் அளவுக்கு அதிகரித்தன. ‘மக்கள் திறனை கட்டியெழுப்புதல்’, ‘வறுமையை ஒழித்தல்’, ‘விளிம்பு நிலை மக்களுக்கு குரல் கொடுத்தல்’ போன்ற வாசகங்களுடன் இவற்றின் வளர்ச்சி இவை மக்களுக்கானவை என்ற செய்தியையே கொடுக்கின்றன. இதை மேலும் ஆராய்ந்து தெளிவோம்.

80களில் நவதாராளவாதம் கோலோச்ச ஆரம்பித்த பின்னர் அரசுகள் பொதுச்சேவைகள் வழங்குவதை குறைத்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டன. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அல்லல்களை மட்டுப்படுத்த அரசசார்பற்ற நிறுவனங்கள் களான்கள் போல உலகெங்கும் முளைக்க ஆரம்பித்தன.

80களில் அரசசார்பற்ற  நிறுவனங்களின் தொகை 1400 வீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு அதன் அரசுகளுக்கு ஊடாக முன்னர் கொடுக்கப்பட்ட உதவித்தொகைகளின் பெரும் பங்கு இப்போது அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஊடாகவே கொடுக்கப்படுகின்றன. இன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அப்பகுதியில் நவதாராளவாதம் மக்களுக்கு ஏற்படுத்தும் அல்லகளின் அளவுகோலாகவே பார்க்க முடியும்.

அரசுகளும், தனியார் பலதேசிய வர்த்தக நிறுவனங்களும் இன்று உலகளாவிய ரீதியில் இருபெரும் அதிகார சக்திகளாக விளங்கும் அதே நேரத்தில் அரசசாரபற்ற நிறுவனங்கள் மூன்றாவது பெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த மூன்றாவது சக்தி மற்றைய இரண்டு சக்திகளுக்கும் சவாலாக உண்மையில் அடிமட்ட மக்களுக்காகத்தான் இயங்குகின்றனவா? அல்லது மற்றைய இரண்டு சக்திகளுடன் கூட்டாக இயங்குகின்றனவா?maxresdefault 1 (சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

அரசசார்பற்ற நிறுவனங்கள் எங்கிருந்து தம் நிதியை பெற்றுக்கொள்கின்றன என்பதை சிந்தித்தால் இன்னும் சில தெளிவுகள் ஏற்படும்.

இவர்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான நிதி அரசுகளிடமிருந்தும், அரசு சார்ந்த அமைப்புக்களிடமிருந்தும் தனியார் பலதேசிய வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்றன. இதனால் இவர்கள்நிதி கொடுப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு  மறைமுகமாகவேனும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பது தெளிவல்லவா?

இவர்கள் ஒருபோதும் நிதி கொடுப்பவர்களுக்கு எதிராக போராட முன்வர மாட்டார்கள். நிதி கொடுப்பவர்கள் போடும் வரம்புகளுக்குள்ளேயே நின்று பெறக்கூடியவற்றையே ஆதரிப்பார்கள்.

அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களாக அரசில் மற்றும் தனியார் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களில் பதவி வகித்தவர்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். மனித உரிமை காப்பகம் என்ற அமைப்பின் ஐக்கிய-அமெரிக்க சார்பையும் இதன் முக்கிய பதவிகளில் ஐ-அமெரிக்க அரசின் வெளிவிவகார பிரிவில் பணிசெய்தவர்களை அமர்த்தியதையும் கண்டித்து உலகின் பல பெரிய மனிதர்கள் 2014இல் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் சிறுதிட்டங்களையே முன்னிலைப்படுத்தும். உறுதியான கொள்கைகள் கொண்ட அமைப்புக்களை ஆதரிக்காது. இத்தகைய அமைப்புக்களுக்கு போட்டியாகவே அவை இயங்கும்.

இதனால் மக்களின் பிரச்சனைகளின் மூலத்தையும் தீர்வுகளையும் ஆராய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் தடையாகவே இருக்கின்றன. தனிமனித முயற்சியிலேயே தீர்வுகள் இருப்பதாக காட்டி மக்களை மடக்கி வைத்திருக்கின்றன. இவை சிறு தொகுதி மக்களுக்கே உதவி தருவதால் மக்களை பிளவுபடுத்துவும் வழிசெய்கின்றன.

நவதாராளவாதத்தின் தாக்கத்திற்கும் அரசு பொதுச்வேவைகளை மட்டுப்படுத்துவதற்கும் எதிராக மக்கள் இயற்கையாகவே போராடியிருப்பார்கள். இடதுசாரிகள் இதை முன்னின்று நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு சமூகத்தில் போராட்டத்தை நடத்தக்கூடிய இடதுசாரிகளை இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் தமக்கு பணிபுரிபவர்களாக மாற்றி அவர்களின் சக்திகளையும் திசைதிருப்பி விடுகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் தமக்கு தேடிக்கொண்ட நற்பெயரும் போராட வேண்டிய இடதுசாரி மக்களை இவ்வாறு திசைதிருப்ப உதவுகிறது. போராட வேண்டிய மக்கள் அரசசார்பற்ற நிறுவனங்களால் திசைதிருப்பப்படுவது ஒரு பெரும்பிரச்சனையாகவே உள்ளது.

இந்நிறுவனங்கள் போராட வேண்டியவர்களில் சிலரை தம் நிறுவனத்தில் உள்வாங்கி  போராட வேண்டிய மக்களை பிரிக்கிறார்கள். இவ்வாறு உள்வாங்கப்பட்டவர்கள் தமது நோக்கத்தை குறுக்கி மக்கள் எதிர்நோக்கும் பெரிய பிரச்சனைகளை தவிர்க்க வழிசெய்கிறார்கள். இதனால் இன்று உண்மையான முற்போக்கு கொள்கைகளை கொண்ட மக்கள் அமைப்புக்கள் அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து உதவி பெறுவதையே தவிர்த்தே இயங்குகின்றன.

மக்களுக்கான நீதியை ஒரு ‘மனித உரிமைகள் தொழிலாக’ மாற்றியதில் இந்த அரசசாரபற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரும் பங்குண்டு. மக்களுக்கான நீதியை மனித உரிமை என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன.

அநீதியின் உண்மை முகத்தை மறைத்து அதிகாரவர்க்கம் செய்யும் கொடூரங்களையும் போராடும் மக்களின் செய்கைகளையும் ஒரே தராசில் போட்டு இருவரிலும் குறைகண்டு பேசும் ஒரு கலாசாரத்தை உருவாக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் வழி செய்திருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட காலத்தில் இதை ஈழத்தமிழர்கள் அப்பட்டமாக அனுபவித்தார்கள். ‘மனித உரிமைகள் என்னும் புதிர்’ என்ற நூலில் ரீபிள் என்ற கனேடிய பேராசிரியர் இதை மேலும் விளக்குகிறார். ஐநாவால் மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து நவதாராளவாதம் அதற்கு எதிராகவே செயற்படுகிறது என்பதை இவர் விபரிக்கிறார்.

2015இல் யுஎஸ்எயிட் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவைரான கெயில் சிமித் என்பவரை சனாதிபதி ஒபாமா நியமித்தார். ஐ-அமெரிக்காவின் இராணுவ தேவையையும் யுஎஸ்எயிட்  நிறுவனத்தையும் இணைக்கும் முயற்சியின் அடுத்த ஒரு படியாக பலர் இந்நியமனத்தை விமர்சித்தார்கள். கெயில் சிமித்; ஆபிரிக்காவின் மோசமான ஆட்சியாளர்களுடன் நெருக்கமானவர் என்பதும் இவ்விமர்சனங்களுக்கு காரணமாக இருந்தது. நாடுகளுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் அந்நாட்டில் ஐ-அமெரிக்க கொள்கைகளுக்கு வழிசெய்யலாம் என்பது இவரின் நம்பிக்கையாக இருந்தது. யுஎஸ்எயிட் நிறுவனத்தின் ஊடாக ஐ-அமெரிக்கா தனது இராணுவ தலையீடுகளையும் கிளர்ச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது அண்மைக்காலத்தில் விரிவடைந்து வருகிறது.HISG NGO graphic (சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

அரசசார்பற்ற நிறுவனங்கள் யாவுமே நன்மை செய்யவில்லை என்றும் சொல்லிவிட முடியாது. அவசரகால நிலைமகளில் அரசசார்பற்ற நிறுவனங்களே முதலில் உதவிக்கு வருகின்ற. இப்படியான அவசரகால நிலைமைகளிலும் கூட பல அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒரே வேலையை செய்வதால் நிதியை விரயமாக்குகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் பின்னர் எழும்பும். இருந்தாலும் ஒரு உதவியும் இல்லாமல் இருப்பதைவிடவும் இது சிறந்ததே. அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒருமுகம் கொண்ட பிரச்சாரங்களில் நிச்சயமாக வெற்றிகள் ஈட்டியிருக்கின்றன. உதாரணமாக கொத்தடிமை கலாசாரத்தை ஒழித்தல்;, நிலகண்ணிவெடி தடை போன்றவை இவை கண்ட வெற்றிகள்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசியல் சார்பற்று இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் இயங்கும் சூழல் முற்றுமுழுதாக ஒரு அரசியல் சூழலாகவே இருப்பதால் அவர்கள் அரசியலற்று இயங்குவது சாத்தியமில்லை. ஆகையால் மக்களை ஏமாற்றாமல் தம் அரசியலையும் அவர்கள் தெளிவாகவே விளக்கினால் என்ன?

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்ட காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் நடத்தைகள் பலவகையில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தன.

இவற்றின் உச்சக்கட்டமாக,  ஒரு இனவழிப்பு நடக்கப்போகிறது என்று தெரிந்தும் சிங்கள அரசு வெளியேறச் சொன்னவுடன் இந்த அமைப்புக்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு அன்று வெளியேறி சாட்சியமில்லாத ஒரு இனவழிப்புக்கு வழி செய்தன.z p 06 Enhanced 1 (சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

இவையெல்லாம் இந்நிறுவனங்கள் யாருடைய நலனை முன்னிறுத்தி இயங்குகின்றன என்பதை தெளிவு செய்கிறதல்லவா?

இன்றும் புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் இயங்கும் சில அரசசார்பற்ற அமைப்புக்களின் பின்னணியையும் அவை எமது மனித வளங்களை பிளவுபடுத்துகின்றவா என்பதையும் நாம் ஆராய்ந்து தெளிய வேண்டும். நாம் இவற்றுடன் இணைந்து செயற்பட்டாலும் இவற்றின் பின்னாலுள்ள சக்திகளையும் இவை எமது இலக்கிற்கு எதிரானவையா என்பதையும் ஆராய்ந்து தெளிய வேண்டியது எமது கடமை.