அச்சமின்றி விடுதலை வீரர்களை நினைவுகூர்ந்த மக்கள் – அல்ஜசீரா

கோத்தபாயாவின் வெற்றி தமிழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியபோதும் தமது மக்களின் விடுதலைக்கு போரிட்டு மரணமடைந்தவர்களை நினைவுகூரும் நாளை அவர்கள் அச்சமின்றி மேற்கொண்டுள்ளனர் என அல்ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் சோழ அரசன் எல்லாளனை துட்டகெமுனு என்ற சிங்கள அரசன் தோற்கடித்த அனுராதபுரம் என்ற பண்டைய தலைநகரத்தில் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்ச தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டுள்ளது சிறுபான்மை இனங்களிடம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அங்கு உள்ள பௌத்த ஆலயத்திலே அவர் தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொண்டுள்ளார். பல இனங்கள் மற்றும் மதங்கள் உள்ள தேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தும் செயலாகும்.

காவல்துறை அதிகாரிகள் பலருக்கு பயணத்தடையை விதித்துள்ள சிறீலங்கா அரசு, தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களையும் அச்சுறுத்தி வருகின்றது. கணணிகளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி பல ஊடகவியலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல ஊடகங்கள் சுயதணிக்கை செய்தே செய்திகளை வெளியிடுகின்றன.

கோத்தபாயாவின் வெற்றி தமிழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியபோதும் தமது மக்களின் விடுதலைக்கு போரிட்டு மரணமடைந்தவர்களை நினைவுகூரும் நாளை அவர்கள் அச்சமின்றி மேற்கொண்டுள்ளனர். பெருமளவான மக்கள் அணிதிரண்டு தமது உறவுகளை நினைவுகூர்ந்தது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் பதவியேற்றுள்ள புதிய அரசால் அங்கு வாழும் மக்களுக்கிடையிலான பிரிவனைகளை மேலும் அதிகரிக்கலாம் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.