கோட்டா உறுதியாக இருந்ததால் பொம்பியோவால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை – விமல்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசு கோழைத்தனமானது அல்ல. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக்கூட இலங்கையின் மீது இந்த விஜயத்தின் போது பிரயோகிக்கவில்லை” என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசியல் ரீதியாக அநாதைகளாகியுள்ள சஜித் தரப்பும், ஜே.வி.பியும் பொம்பியோவின் விஜயத்தின்போது பெரிதும் பதற்றமடைந்த போதிலும் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

நாட்டின் ஆட்சியாளர் முதுகெலும்புடைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்றால், உலக வல்லரசு என்றாலும் அழுத்தங்களைப் பிரயோகிக்காது. ரணில் விக்கிரமசிங்க போன்ற கோழைகள் ஆட்சியில் இருந்திருந்தால் பொம்பியோவின் விஜயத்தின்போது பதற்றமடைந்திருக்க வேண்டும்.

ஏனெனில் உலக வல்லாதிக்க நாடுகளின் தாளத்திற்கு இவ்வாறான கோழை ஆட்சியாளர்கள் ஆடக்கூடியவர்கள். எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இந்த அரசு அவ்வாறு கோழைத்தனமானது அல்ல. இந்த அரசு நாட்டின் இறைமை, பௌதிக ஒருமைப்பாடு என்பன குறித்து மிகுந்த கரிசனையுடையது.

மைக் பொம்பியோ இந்தியா மீது பிரயோகித்த அழுத்தங்களைக்கூட இலங்கையின் மீது இந்த விஜயத்தின் போது பிரயோகிக்கவில்லை. இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தைரியமிக்க ஆட்சியே காரணம்” என்றார்.