கொழும்பு துறைமுக ஒப்பந்தம் இரத்து – அதானிக்கு ஆதரவாக பழைய திட்டத்திற்கு பதில் புதிய திட்டம்

கொழும்பின் கிழக்கு துறைமுக முனைய வளர்ச்சி பணிகளுக்காக ஐப்பான் – இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக இலங்கை முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்தியா, சட்ட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பையும் இழந்திருக்கிறது என தெற்காசிய பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை துணை பேராசிரியர் பிரபாஸ் ரஞ்சன் கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT)  மேம்படுத்துவதற்கு இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள்  இணைந்து முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2019ஆம் ஆண்டு செய்துகொண்டன.

மேலும் இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 சதவீத பங்குகளையும் இலங்கை அரசு 51 சதவீத பங்குகளையும் வைத்துக்கொள்ளும்.

இந்த நிலையில்  இந்த  ஒப்பந்தத்தை சமீபத்தில்  தன்னிச்சையாக இரத்து செய்த இலங்கை அரசு, தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக குறித்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாகவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை  மேம்படுத்தும் பணி இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும்  அறிவித்தது. ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள இந்தியா, 2019ஆம் ஆண்டு மே மாதம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

இதையடுத்து இந்தியாவிடம் இருந்து  பெற்றுக்கொண்ட  ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தி உள்ளது என  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந் நிலையில், இந்தியாவுடன் இலங்கை அரசு ஏற்படுத்திய ஒப்பந்தம் மீறப்பட்ட காரணத்தினால், முன்னதாக (கிழக்கு கொள்கலன் முனையம் மேம்பாடு) ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அதே விதிகளோடு (இந்தியா,ஜப்பான்,49 சதவீதம் பங்கு, இலங்கை 51 சதவீதம் பங்கு) ஒரு புதிய திட்டத்திற்கான (மேற்கு கொள்கலன் முனையம் மேம்பாடு) ஒப்பந்தத்தை இலங்கை அரசு முன்மொழிந்திருப்பதாக தி ஸ்க்ரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா பங்கு வகிக்கும் துறைமுக மேம்பாடு திட்டத்தை அதானி குழுமம் செயற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.