கொழும்பு உட்பட நான்கு இடங்களிலிருந்து  அவுஸ்திரேலியா  செல்லும் விமானங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு முற்றாக தடைசெய்யப்பட்ட மெல்பேர்ன் சர்வதேச விமானநிலையம்  இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.

விக்டோரிய அரசாங்கத்தின் உச்சக்கட்ட பாதுகாப்பு முன்னாயத்தங்களுடன் திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் வழியாக முதற்கட்டமாக, நாடு திரும்ப முடியாமல் இவ்வளவு காலமும் சிக்கியிருந்த 125 அவுஸ்திரேலியர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, டோஹா, ஹொங்கொங் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு சேவையும் சிங்கப்பூரிலிருந்து இரண்டு விமானசேவைகளிலும் பயணிகள் முதற்கட்டமாக மெல்பேர்ன் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மெல்பேர்ன் நகர் புறத்திலுள்ள ஹோட்டலுக்கு விசேட பேரூந்து மூலம் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு மருத்துவ ரீதியான தனிமைப்படுத்தப் படவுள்ளனர்.

கடந்த காலங்களில் தனிமைப்படுத்தல் பொறிமுறையில் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற தவறுகள் – சிக்கல்கள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, இம்முறை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைக்கு உச்சக்கவனம் செலுத்தப்படும் என்று விக்டோரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலுக்கான 14 நாட்கள் தங்குமிட செலவு தலா 3500 டொலர்கள் – ஏனைய மாநிலங்களில் நடைமுறையிலுள்ளது போல   பயணிகளே செலுத்தவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலப்பகுதியில், உடற்பயிற்சிக் கான அனுமதியோ காற்று வாங்குவதற்கான அனுமதியோ முற்றாக மறுக்கப்படும் என்றும் ஹோட்டலில் எவருடனும் மிகத்தேவையான தொடர்புகள் மட்டும் உரிய பாதுகாப்புடன் மாத்திரம் அனுமதிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கான பாதுகாப்பு பணி மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்காக மெல்பேர்ன் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல்கள் வரை சுமார் முன்னூறு பொலிஸாரும் 220 பாதுகாப்பு படையினரும் விசேட பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – SBS தமிழ்