கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயற்சி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட ஒரு சிறையில், சில கைதிகள் சுரங்கம் தோண்டி அதன் மூலம் தப்பிக்க எடுத்த முயற்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்வாய்சென்சியோவில் உள்ள அந்த சிறையில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை கொண்டு 7 கைதிகள் தங்கள் சிறை செல்லில் சுரங்கம் தோண்ட முயற்சித்தனர்.

உள்ளூர் சண்டைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கொண்டு இவர்கள் சுரங்கம் தோண்டி தப்பிக்க எடுத்த முயற்சியை சரியான நேரத்தில் தகவல் கிடைத்ததால் அதிகாரிகளால் முறியடிக்க முடிந்தது.

அந்த சிறையில் உள்ள சிறைக்காவலர்கள் உள்பட 314 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அந்த வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த கைதிகள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி, கொரோனா அச்சத்தால் சற்றே பாதுகாப்பு குறைபாடான சூழலை பயன்படுத்தி கொள்ள முயன்றனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் புகைப்படங்களை வெளியிட்ட சிறை காவலர்கள், இவர்கள் தோண்ட ஆரம்பித்த சுரங்கத்தின் புகைப்படம் அல்லது மற்ற தகவல்களை வெளியிடவில்லை.