கொரோனா வைத்தியசாலையில் அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்றிவருகிறோம்-வைத்திய கலாநிதி லதாகரன்

மட்டக்களப்பு காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 55 கொரனா தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்து இன்று இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பல்வேறு அழுத்தங்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது பணியை சுகாதார துறையினர் அங்கு மேற்கொண்டதாகவும் கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியிலும் படையினர்பொலிஸார்,சுகாதார துறையினரின் அர்ப்பணிப்புமிக்க சேவையினால் இந்த நிலையினை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் எங்களுக்கு தரப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரிவாக மாற்றும்படி சுகாதார அமைச்சிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைவாக அந்த வைத்தியசாலையை நாங்கள் பல சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அந்த வைத்தியசாலையில் கொரொனா நோயாளர்களை உள்வாங்கி சிகிச்சையளித்து பராமரிக்கும் ஒரு வைத்தியசாலையாக மாற்றியமைத்தோம்.

ஏப்ரல் மாதம் 20,21,22ஆம் திகதிகளில் 46நோயாளர்களும் 23,24ஆம் திகதிகளில் 12நோயாளர்களும் அதன்பின்னர் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களுமாக மொத்தம் 62கொரொனா நோயாளர்களை பராமரித்துக்கொண்டிருந்தோம். இவர்களுள் 29ஆண்களும் 33பெண்களும் அடங்குவர். இந்த 62நோயாளர்களுள் சிங்களவர்கள் நான்கு பேரும் தமிழர்கள் ஐந்துபேரும் முஸ்லிம்கள் 53பேரும் அடங்குவர்.

இன்று 62நோயாளர்களுள் 55கொரொனா தொற்றப்பட்டு குணமடைந்த நோயாளர்கள் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இன்று காலை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போது அவ்வைத்தியசாலையில் 7கொரொனா தொற்றப்பட்ட நோயாளர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இன்று நாங்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றோம். அவர்களுக்கு இரண்டு தடவைகள் பாசோதனையை மேற்கொண்டு தொற்றில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

இந்த நேரத்தில் நாங்கள் பலருக்கு நன்றிகளை கூற கடமைப்பட்டிருக்கின்றோம். சுகாதார திணைக்களத்திலுள்ள அத்தனைவிதமான ஊழியர்களின் பங்களிப்பின் காரணமாகவே இன்று நாங்கள் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.

கொவிட் 19 வைத்தியசாலையை ஆரம்பிக்குமாறு தரப்பட்ட கட்டளைகளின் பின்னர் மத்திய சுகாதார அமைச்சிலிருக்கின்ற பணிப்பாளர் உட்பட அனைத்து மேலதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.

காத்தான்குடி வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். தொற்றுக்குள்ளான நோயாளிகள் குணமடைந்து வீடு செல்லும் வரை அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த அனைவருக்கும் நன்றிகளை கூற வேண்டும்.

மாகாண திணைக்களம் என்ற ரீதியில் இந்த வைத்தியசாலையை சரியான முறையில் வழிநடத்திச் செல்வதற்காக உதவிய ஆளுநர் தொடங்கி பிரதம செயலாளர்,மாகாண பணிப்பாளர் மற்றும் மாகாண திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகளை கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

இந்த வைத்தியசாலையை ஆரம்பிப்பதற்கு முன்னர் நடைபெற்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள்,வெளியிலிருந்து வந்த எதிர்புகள் ஏன்பவற்றுக்கும் மத்தியில் சரியான தகவல்களை சரியான முறையில் அந்த மக்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் வழங்கி 55பேரை ஒரே தடவையில் குணமாக்கி அனுப்புவதற்கு காரணமாக இருந்த வைத்தியர் அச்சுதன்,வைத்தியர் சசி,வைத்தியர் ஜாபிர் போன்றோருக்கும் நன்றிகளை கூற வேண்டும்.

இந்த வைத்தியசாலையை சரியான முறையில் வழிநடத்திச் செல்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கி பக்கபலமாக இருந்த பொலிஸ் மேலதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர் அனைவருக்கும் நன்றிகளை கூற வேண்டும்.

இதுவரைக்கும் இந்த வைத்தியசாலையில் தேக்கிவைக்கப்பட்டிருக்கின்ற பொதுவான கழிவுகளை இன்றுவரை காத்தான்குடி நகரசபையானது அகற்றவில்லை என்பது துரதிஷ்டவசமான விடயமாகும்.

இலங்கையின் பல பகுதிகளிலும் இதுபோன்ற வைத்தியசாலைகளை நிறுவியுள்ளனர். கொரொனா நோயாளிகளின் சகலவிதமான கழிவுகளையும் நாங்கள் சரியான முறையில் அகற்றுகின்றோம்.ஆனால் பொதுவான கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தபோதும் எங்கள் சுகாதார பணிப்பாளர்களின் உதவியுடன் நாங்கள் அவற்றை சரியான முறையில் அகற்றிக்கொண்டிருக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களில் கொரொனா தொற்றானது இலங்கையிலிருந்து படிப்படியாக இல்லாதொழிந்து போகின்றபோது இந்த வைத்தியசாலையில் கொரொனா தொற்றுக்கான பிரிவின் தேவையும் இல்லாது போகும். சுகாதார அமைச்சிலிருந்து வரும் உத்தரவுகளின் அடிப்படையில் காத்தான்குடி வைத்தியசாலையை நாங்கள் பழையபடி ஆதார வைத்தியசாலையாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு பயன்படுத்தலாம். ஆனால் இதுவரைக்கும் எந்தவிதமான உத்தரவுகளும் வரவில்லை. இலங்கையில் கொரொனா தொற்று அபாயம் இதுவரைக்கும் நீங்காத காரணத்தினால்; காத்தான்குடி வைத்தியசாலையை கொரொனா சிகிச்சைக்கான வைத்தியசாலையாக தயார் நிலையில் வைத்திருப்போம்.