கொரோனா முகக்கவச பாவனை WHO நியமங்களில் மாற்றம் வரலாம்.

அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, கொரோனா பாதித்த ஒருவர் இருமினால் அது ஆறு மீட்டர் வரையும், தும்மினால் எட்டு மீட்டர் வரையும் இருப்பவர்களை பாதிக்கக் கூடும். இது தற்சமயத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் நம்பப்பட்டு வரும் தூரத்தை விட அதிகம். எனவே, இந்த சிறப்பு குழுவானது வைரஸின் பரவல் தூரம் குறித்து ஆய்வு நடத்த உள்ளது.

அந்த சிறப்பு குழுவின் தலைவரான பேராசிரியர் டேவிட் ஹெய்மான், இந்த புதிய ஆய்வு முகக்கவசங்கள் குறித்து அளிக்கப்பட்டு வரும் வழிகாட்டுதல்களில் மாற்றத்தை கொண்டுவர கூடும் என்று கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான அவர், “முகக்கவசங்களை அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அளித்து வரும் பரிந்துரையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க புதிய ஆதாரங்களை மையாக கொண்ட விவாதத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக இருமல் அல்லது தும்மும் எவரிடமிருந்தும் குறைந்தது ஒரு மீட்டர் தூரம் தள்ளியிருக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய பரிந்துரையாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா?
ஆனால், நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை கவனித்துக்கொள்ளும் ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்போரும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது.

முகக்கவசத்தை சரிவர பயன்படுத்துவதுடன், அடிக்கடி கை கழுவதும் மிகவும் முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர் இடைவெளியில் இருந்தால் மட்டுமே அது சமூக விலக்கமாக கருதப்படும் என்று பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்துகின்றன.

திரவ துளிகளின் வாயிலாக மட்டுமே வைரஸ்கள் பரவ முடியும் என்பதைக் காட்டும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த ஆலோசனை அமைந்துள்ளது.