கொரோனா பரவல் விவகாரம் – சீனாவில் எந்த இடையூரும் இன்றி ஆய்வை மேற்கொண்டோம் – WHO

கொரோனா தொற்றின் பிறப்பிடமாக  உள்ள வூஹான் மாகாணத்தில் ஆய்வுக்குச் சென்ற விஞ்ஞானிகள் குழுவுக்கு  சீனா முழு ஆதரவை அளித்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதி பகுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று தற்போது உலகம் முழுவதிலும் பரவியுள்ளது.

இது வரையில் உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  106,353,381  ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் 2,320,692 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து அமெரிக்கா சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்ததையடுத்து உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் கொரோனா பரவல் குறித்து உண்மை நிலையினை கண்டறிய சீனாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து  உலக சுகாதார அமைப்பின்  குழு கூறும்போது,

“ வூஹானில் நாங்கள் எந்தவித தடையுமின்றி ஆய்வு செய்தோம். சீன அரசு எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானக் குழு சீனாவுக்குச் சென்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வூஹான் சந்தையில் மருத்துவக் குழு ஆய்வு நடத்தியுள்ளது என்றும், மேலும் முதலில்  கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்ட மருத்துவமனைகளிலும் இக்குழு ஆய்வு செய்தது .

ஆய்வுக்குப் பின் உலக சுகாதார அமைப்பின் மருத்துவக் குழு அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை.

முன்னதாக, பலத்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே வூஹானின் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவவில்லை. உலகின் பல இடங்களில் கொரோனா பரவல் நிகழ்ந்துள்ளது என்று  சீனா விளக்கமளித்தது.

உலகையே அச்சுறுத்திவரும்  கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கொரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நாடுகளில் போடப்பட்டு வருகிறது” என்றது.