கொரோனா பரவல்: ஆய்வாளர்களின் ஆதாரங்களை ஏற்றுக் கொண்டது உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக 200இற்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கூறிய கருத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும். ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவும். பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தேய்க்கும் போது வைரஸ் பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தியது.

இதேவேளை கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உலக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஒருவர் தும்மிய பின், இருமிய பின் அவரின் எச்சில் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவியிருந்தால் அதை மற்றொருவர் சுவாசிக்கும் போது அவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே கொரோனா காற்றில் பரவும் என அறிவிக்க வேண்டும் என 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் வல்லுநர்கள், ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்பிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர். இதனை தாம் ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர் ஜெனீவாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கருத்துத் தெரிவிக்கும் போது, கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வாளர்கள், வல்லுநர்களின் கூற்றை உலக சுகாதார அமைப்பினர் ஏற்றுக் கொள்வதாக கூறினார்.