கொரோனா தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த அல்லது உயிரிழந்தாக சந்தேகிக்கப்படுபவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு அமைய, ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கு ஆகக் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை 800 க்கும், 1,000க்கும் இடையிலான வெப்ப நிலை தன்மையை கொண்டிருத்தல் வேண்டும்.

அத்துடன், அத்தகயை அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் முறையான அதிகாரியினால் அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்யப்படுதல் வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளெவரும், கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ள அல்லது உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடலை முறையான அதிகாரியினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அவசிய கடமைகளை பொறுப்பேற்கின்ற ஆட்கள் தவிர்ந்த வேறெவரேனும் ஆளுக்கு கையளித்தலாகாது.

அத்தகைய சுடலை அல்லது இடத்தில் பூதவுடலை கையாளுகின்ற ஆட்களினால் பயன்படுத்தப்படும் உடை மற்றும் மீள பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்ப கருவிகள் தகனத்தின்போது சவப்பெட்டியுடன் அவற்றை இடுவதன் மூலம் எரிக்கப்படுதல் வேண்டும்.

மீளபயன்படுத்தப்படக்கூடிய கருவியானது சுகாதார பணிப்பாளர் தலைமை அதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க முறையாக தூய்மைப்படுத்தலும், கிருமி நீக்கப்படுதலும் வேண்டும்.

பூதவுடலின் சாம்பலானதும், உறவினரின் வேண்டுகோளின் பேரில் அத்தகைய உறவினருக்கு கையளிக்கப்படலாம் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்தமானி அறிவித்தலை காண இங்கே அழுத்தவும்